நுவரெலியா நகரில் பல இடங்களிலும் ஆலங்கட்டி மழை அதிகாலையில் பெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா என்றாலே இயற்கை அழகு நிரம்பிய ஓர் அழகிய பிரதேசம். டிசம்பர் மாதம் விடுமுறை காலம் என்பதால் இக்காலத்தில் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இவ்வழகிய நகரத்திற்கு ஆண்டு தோறும் வருகை தருவார்கள்.
பெரும்பான்மையான உல்லாச பிரயாணிகள் “உலக முடிவு” எனும் இடத்தைக் கண்டுகளிப்பதற்கு அதிகாலை வேளைகளில் செல்வது வழக்கம். மேலும் சுற்றுலா பிரயாணிகள் கண்டுகளிப்பதற்கு விரும்பும் இடங்கள் அதிகம் உள்ளன.
அவற்றில் அம்பேவெல கால்நடை பண்ணை, ஹய்லென்ட் பால் தொழிற்சாலை, ஹோர்டன் பிளேன்ஸ், சந்ததென்ன சிறிய உலக முடிவு, விக்டோரியா பூங்கா, ஹக்கல தாவரவியல் பூங்கா, லவர்ஸ்லீப் நீர் வீழ்ச்சி, பிதுருதாலகால மலை, பீட்று தேயிலைத் தொழிற்சாலை என்பனவற்றைக் கூறலாம்.
ஆனாலும் நுவரெலியாவிற்கு வரும் பிரயாணிகள் ஆலங்கட்டி மழையை கண்காட்சியாகவே கண்டு ரசிக்கிறார்கள். இந்த கடுங் குளிர் கொண்ட ஆலங்கட்டி மழை ஐந்து வருடங்களுக்குப் பின்னரே இங்கு காணப்படுகிறது.
இவ்வாறு பனிக்கட்டிகள் விழுவதால் பொருளாதாரத்திற்கு பெரும் ஊன்றுகோலாக திகழும் தேயிலைப் பயிர்ச் செய்கை, மரக்கறி பயிர்ச் செய்கை மற்றும் பூக்கள் போன்றவைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது.
இந்தக் கடுங்குளிர் காரணமாக பாடசாலை மாணவர்கள், அன்றாட தொழிலுக்கு செல்பவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.