ஊடகவியலாளர்கள் வெறுமனே விமர்சிப்பவர்களாக மட்டும் இருக்க கூடாது - ரீ.எல்.ஜவ்பர்கான்

Report Print Kumar in சமூகம்
32Shares

ஊடகவியலாளர்கள் வெறுமனே விமர்சிப்பவர்களாக மாத்திரம் இருக்கக்கூடாது. அதற்கான தீர்வினை முன்வைப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என காத்தான்குடி ஊடகவியலாளர் மன்றத்தின் தலைவர் ரீ.எல்.ஜவ்பர்கான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கி வரும் காத்தான்குடி ஊடகவியலாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் கடந்த வருட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடங்களை பெற்ற காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(08) காத்தான்குடி 01 அல்-ஹதா வீதியில் அமைந்துள்ள ஹோப் சென்டரில் இடம்பெற்றது.

இதில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

காத்தான்குடி ஊடகவியலாளர் மன்றத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

மேற்படி கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக காத்தான்குடி நகர சபை செயலாளர் எஸ்.எம்.எம்.சபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பணம்தான் இலக்கு என்கின்ற பார்வையை விட்டு கொஞ்சம் வெளியே வந்து சமுகம் சார்ந்த விடயங்களிலும் ஊடகவியலாளர்கள் அதிக கவனஞ்செலுத்த வேண்டும்.

ஊடகவியலாளர் பணி என்பது ஏனைய சில தொழில்களைப் போல உழைப்பை மாத்திரம் இலக்காகக் கொண்டதல்ல. சமுகம் சார்ந்த அடைவுகளை எட்டுவதற்கான களமுமாகும்.

அதன் ஒரு கட்டம் தான் இந்தப் பாராட்டு விழா. இன்றை முகநூல் உட்பட சில சமுக வலைத்தளங்களின் வருகையின் பின்னர் ஊடகப் பணி தூய்மையானதும் சமுகப் பார்வை கொண்டதும் என்கின்ற எண்ணப்பாடு சற்று விலகிச் செல்கின்றதோ என எண்ணத் தோன்றுகின்றது.

இன்று முகநூலின் ஆக்கிரமிப்பின் பின்னர் அலைபேசி வைத்திருப்பவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்கள் என்கின்ற நிலைமை உருவாகியுள்ளது.

இது ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிச் செல்லுமா என்கின்ற கேள்விக்குறி உருவாகியுள்ளது. தமக்கு வேண்டாதவர்களை முகமூடி அணிந்து கொண்டு திட்டுகின்ற களமாக மாறிவிட்டது.

எதிர்காலத்தில் கல்வித்துறையில் சாதனை நிறைந்த ஒரு சமூகமாக மாறுவதற்கான எடுகைதான் இத்தகைய வெளியீடுகள்.

இதனை எப்படியாவது பாராட்டியே ஆக வேண்டும் என்பதற்காகவே பரீட்சை முடிவுகள் வெளியாகி 24 மணி நேரத்தினுள் இவ்விழாவை நடாத்தியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

இதன் போது அதிதிகளினால் 2016 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்திலே முதலிடம் பெற்ற காத்தான்குடியைச் சேர்ந்த மாணவர்களில் உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவி முஹம்மத் ஜிப்ரி பாத்திமா றிஸ்மா மற்றும் வர்த்தகம், பொறியியல் தொழில்நுட்பம் பிரிவுகளில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலை மாணவர்களான சரிபுதீன் அப்துர் ரஹ்மான், அன்ஸார் முஹம்மத் அம்ரித் ஆகியோர் அதிதிகளினால் மாலை அணிவித்து பதக்கமும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

2016 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடங்களை பெற்ற காத்தான்குடி பிரதேச மாணவர்களை முதற் தடவையாக கௌரவிக்கும் இந்த நிகழ்வில் குறித்த பாடசாலையின் அதிபர்களான எம்.சீ.எம். சத்தார், எஸ்.எச்.பிர்தௌஸ்ஆகியோர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

குறித்த நிகழ்வில் பரீட் பவுண்டேஷனின் பணிப்பாளர் கே.எல்.எம்.பரீட், முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி சங்கத்தின் தலைவர் கே.எம்.எம். கலீல், ஆர்.ஜி.எப்.நிறுவனத்தின் முகாமையாளர் ஏ.எஸ்.எம்.முஹீத், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின், காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார திலங்க ஜெயலால், பெண்களின் அபிவிருத்திக்கும் வலுவூட்டலுக்குமான அமைப்பின் தலைவியும் முன்னாள் நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்ஸா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை, காத்தான்குடி மத்தியஸ்த சபையின் தவிசாளர் எம்.ஐ.எம்.உஸனார், காத்தான்குடி மின்சார சபையின் அத்தியட்சகர் எம்.சீ.எம்.நௌபல், புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் சுல்மி, ஊர்பிரமுகர்கள், கல்வியலாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், காத்தான்குடி ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் எம்.ஏ.சீ.ம்.ஜெலீஸ், பொருளாளர் பழுலுல்லாஹ் பாஸல் பர்ஹான், நிர்வாக உறுப்பினர்களாக ஜூனைட் எம் பஹத் மற்றும் அப்துல் கையூம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments