அண்மையில் வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறு அடிப்படையில் வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயம் தனது பாடசாலை வரலாற்றில் வரலாற்றுச் சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது.
வவுனியா மாவட்டத்தின் தெற்கு வலயத்தில் உள்ள பின் தங்கிய மாணவர்களை அதிகமாக கொண்ட இந்த பாடசாலையில் இம்முறை வெளியாகிய பரீட்சைக் பெறுபேற்றில் இரு மாணவர்கள் சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.தர்மரட்ணம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
எமது பாடசாலை மாணவன் உயிர்முறைகள் தொழிநுட்ப பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று வடமாகாணம் மற்றும் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு மட்டுமல்லாது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளான்.
அடுத்து, கணிதப்பிரிவில் மனோகரன் அருண்ராஜ் எ.பி.சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 14வது இடத்தினைப் பெற்று செட்டிகுளம் பகுதியில் இருந்து பொறியியல் பீடத்திற்கு தெரிவான முதல் மாணவன் என்ற சாதனையைப் பதிவு செய்துள்ளான்.
இது தவிர, கணிதப் பிரிவில் கணேஸ் உசாந்தன் சி.2எஸ் சித்திகளையும், நவரட்ணராசா கிருசாயினி பி.2சி சித்திகளை பெற்று மாவட்ட நிலை ரீதியில் எட்டாம் இடத்தினையும், வர்த்தகப்பிரிவில் முருகதாஸ் மோகன்ராஜ் ஏ.2பி சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதேவேளை, கணிதப்பிரிவில் எமது பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியது இதுவே முதற்தடவையாகும்.
எமது பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து உள்ளிட்ட கஷ்டங்களுக்கு மத்தியிலேயே இங்கு வந்து கற்பதுடன் ஆசிரியர்களும் போக்குவரத்து தொடர்பில் பிரச்சனைகளை எதிர் கொண்டுள்ள நிலையிலேயே அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர்.
மேலும், வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் இவ்வாண்டு பரீட்சை எழுதியோரில் 4 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெற்றுள்னர் என பாடசாலை அதிபர் எஸ்.தர்மரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் 16மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு
அண்மையில் வெளியாகிய க.பொ.த.( உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவன் வர்த்தக பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட நிலையில் முதலாமிடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த பாடசாலையில் 16 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதாக பாடசாலை அதிபர் ச.சுபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,கணிதப்பிரிவில் செல்வதேவன் ஹனுஷ்யன் 2ஏ, பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் நான்காம் இடத்தினையும், வர்த்தகப்பிரிவில் ரங்கநாதன் யதுகுலன் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
இந்த பாடசாலை வரலாற்றிலும், வவுனியா வடக்கு வலய வரலாற்றிலும் வர்த்தபிரிவில் முதலாமிடத்தினை பெற்றது இது முதற்தடவையாகும்.