மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் இந்த வருடம் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை மகிழ்ச்சிகரமாக பாடசாலைக்கு வழி அனுப்பும் வகையில் முசலி பிரதேசச் செயலகத்தில் 'கால் கோள் விழா' நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு முசலி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், முசலி பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் வலய கல்விப் பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியன், கௌரவ விருந்தினர்களாக முசலி சுகாதார வைத்திய அதிகாரி ஒஸ்மன் சால்ஸ், முசலி கோட்டக்கல்வி அதிகாரி து.கிரிஸ்துராஜா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது, முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள 25 முன்பள்ளிகளைச் சேர்ந்த 281 மாணவர்கள் வரவேற்கப்பட்டு பாடாசாலை புத்தகப்பை வழக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பாடசாலைகளைச் சேர்ந்த 39 முன்பள்ளி ஆசிரியர்களும் முசலி பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் கௌரவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்வுகளும் நடாத்தப்பட்டுள்ளது.
மேலும், வடக்கில் முன்பள்ளி மாணவர்களை கௌரவித்து அவர்களை தரம் 01 இற்கு இன்று அனுப்பும் வகையில் முதல் நிகழ்வொன்றை முன்னெடுத்தது முசலி பிரதேச செயலகம் என பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.