கிளிநொச்சியில் 14 பேருக்கு டெங்கு வேகமாக பரவி வருவதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை

Report Print Suman Suman in சமூகம்
48Shares

கிளிநொச்சியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருவதாகவும், கடந்த ஒரு சில நாட்களில் மட்டும் 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்கொல்லி டெங்கு நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், காய்ச்சல் இரண்டு நாட்களிற்கு மேல் நீடித்தால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுகொள்ளப்படுகின்றன.

அத்துடன் மாவட்டத்திலுள்ள கர்ப்பிணி பெண்கள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள் ஆகியோருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலானது, தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த வருடம் வரை டெங்கு நோய் அற்ற மாவட்டமாக கிளிநொச்சி காணப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது 2017ஆம் வருடத்தின் முதல் ஏழு நாட்களில் கிராஞ்சி, சிவபுரம், மலையாளபுரம், அம்பாள்குளம், கணேசபுரம், வலைப்பாடு, கல்மடு, செல்வாநகர் மற்றும் விசுவமடு ஆகிய, இடங்களிலிருந்து 14போ் டெங்குக்காய்ச்சல் காரணமாக கிளிநொச்சிப் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இனங்கண்டு முற்றாக அழித்தொழிக்குமாறு சுகாதார பிரிவினா் அவசர அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments