யாழில் சிறப்பாக நடைபெற்ற கால்கோல் விழா

Report Print Thamilin Tholan in சமூகம்
41Shares

யாழ் கோண்டாவில் சி.சி.த.க பாடசாலையின் தரம் 01 மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழாவும் தளபாடங்களைக் கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று(11) காலை 09.15 மணியளவில் அதிபர் சி.நந்தகுமார் தலைமையிலே விமர்சையாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கோண்டாவில் அரசடி விநாயகர் ஆலயத்திலிருந்து மாணவர்களுக்கு மாலை அணிவித்து பாண்ட் வாத்தியங்கள் முழங்கப் பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டமையைத் தொடர்ந்து இறை வணக்கத்துடன் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமானது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பிரதம விருந்தினராகவும் வடமாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராஜா, யாழ் கோண்டாவில் இந்துக் கல்லூரி அதிபர் செ.மோகநாதன் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைக்கென 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த தளபாடங்களை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வழங்கி வைக்க பாடசாலையின் அதிபர் சம்பிரதாயபூர்வமாகப் பெற்றுக் கொண்டார்.

இதன் போது வறுமைக் கோட்டுக்கு உட்பட்டதும் தெரிவு செய்யப்பட்டதுமான ஆறு மாணவர்களுக்குக் கோண்டாவில் சத்திய சாயி சேவா நிலையத்தினால் தலா 1000 ரூபா பெறுமதியான கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கி வைக்கப்பட்டது.

மாதாந்தம் இந்த நிதியை வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் போது ஆரம்பப் பிரிவு மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இணைந்து கொண்ட மாணவர்களுக்குப் பாடசாலைச் சமூகம் சார்பாகச் சிறப்புப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments