மாணவனின் கல்வி வளர்ச்சி ஆசிரியர்களில் மாத்திரம் தங்கியிருப்பதில்லை - எம்.கே.சிவாஜிலிங்கம்

Report Print Thamilin Tholan in சமூகம்

ஒரு மாணவனின் கல்வி வளர்ச்சி என்பது வெறுமனே ஆசிரியர்களில் மாத்திரம் தங்கியிருப்பதில்லை, என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வடக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். கோண்டாவில் சி.சி.த.க பாடசாலையில் தரம்-01 மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழாவும், தளபாடங்கள் கையளிப்பும், நேற்று புதன்கிழமை(11) அதிபர் சி.நந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவச் செல்வங்கள் ஆகிய மூன்று தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்படும் போது தான் பாடாசாலைக் கல்வியில் மாத்திரமல்லாமல் ஏனைய விளையாட்டு போன்ற இணைப்பாட விதானச் செயற்பாடுகளிலும், போட்டிகளிலும் மாணவர்களால் சிறந்து விளங்க முடியும்.

சிறிய பல பாடசாலைகள் பல தற்போது 20 அல்லது 25 மாணவர்களுடன் மூடப்படுகின்ற நிலைமை காணப்படுகிறது.

இவ்வாறானதொரு சூழலில் இந்த பாடசாலையில் அதிகளவு மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று கல்வி கற்று வருவது மகிழ்ச்சிக்குரிய விடயம்.

வடக்கு மாகாண சபை பாடசாலைகளின் அபிவிருத்திக்கு உதவி புரிந்து வருகிறது. வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான நாம் எமக்கென ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைகளுக்கு எம்மால் இயன்ற பங்களிப்பை வழங்கி வருகிறோம். இந்த பங்களிப்பு தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

Comments