கடலுக்கு சென்று காணாமல்போன நான்கு மீனவர்களும் மீட்பு

Report Print Nesan Nesan in சமூகம்

கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி இரண்டு இயந்திர படகுகளில் கடலுக்கு சென்று காணாமல் போன கல்முனையை சேர்ந்த இரண்டாவது தொகுதி மீனவர்கள் நால்வரும் மற்றைய படகுடன் இன்று அதிகாலை மாலைதீவு கரையோரப் பாதுகாப்பு படையினரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இத்தகவலை மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவர், தன்னுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஒலுவில் துறைமுகத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி இரண்டு இயந்திர படகுகளில் மீன்பிடிக்காக கடலுக்கு சென்றிருந்த ஆறு மீனவர்கள் காணாமல் போயிருந்தனர்.

இவர்களுள் ஒரு படகில் இருந்த ஏ.பி.ஹாஜா முஹைதீன், எம்.எம்.அர்ஜில் ஆகிய இரு மீனவர்களும் அப்படகுடன் கடந்த 05 ஆம் திகதி மாலைதீவு கடற்பரப்பில் அந்நாட்டு கடற்படையினரினால் காப்பாற்றப்பட்டிருந்தனர்.

அதேவேளை மற்றைய படகில் சென்றிருந்த கே.எம்.நஸீருத்தீன், ஏ.எம்.அலாவுதீன், எம்.எம்.வாஹிதீன், அப்துல் வாஹித் ஆகிய நான்கு மீனவர்களும் தொடர்ச்சியாக தேடப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை உயிருடன் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

ஏற்கனவே மீட்கப்பட்ட இரு மீனவர்களையும் நேற்று நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அந்த ஏற்பாடுகள் பூர்த்தியடையாததன் காரணமாக அவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை.

இந்நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ள நான்கு மீனவர்களையும் சேர்த்து அனைவரையும் ஒன்றாக அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Comments