மன்னாரில் சுகாதார பரிசோதகர்களுக்கு இடையூறை ஏற்படுத்திய பெண் விளக்கமறியலில்

Report Print Ashik in சமூகம்
72Shares

மன்னாரில் டெங்கு நுளம்பு சோதனையில் ஈடுபட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்களின் கடமையினைச் செய்ய விடாது இடையூறு ஏற்படுத்திய வீட்டு உரிமையாளரான பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று(11) உத்தரவிட்டுள்ளது.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தலைமையிலான குழு டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் வகையில் விசேட வேலைத் திட்டங்களை மேற்கொண்டு மக்களின் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் டெங்கு சோதனையில் ஈடுபட்ட குறித்த குழுவினர் குறித்த கிராமத்தைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர்கள் 3 பேருக்கு எதிராகவும் ஆலய பங்குச்சபை மற்றும் மன்னார் பிரதேச சபை ஆகிய ஐவருக்கு எதிராகவும் மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இதன்போது குறித்த நபர்கள் தமது வீடு, காணி போன்றவற்றில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் தமது இடங்களை வைத்திருந்ததாகவே கூறி மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் போது நீதிமன்ற அழைப்பானை கட்டளையை தாழ்வு பாட்டு கிராமத்தில் உள்ள அழைக்கப்பட்டவர்களுக்கு மன்னார் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் வழங்கப்பட்டது.

மேலும் குறித்த கிராமத்தைச் சேர்ந்த வீட்டு உரிமையாளரான பெண்ணொருவர் நீதிமன்ற கட்டளையை உதாசீனம் செய்துள்ளதோடு பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு அவர்களின் கடமையினை செய்ய விடாது இடையூறை ஏற்படுத்தி அவர்களை அச்சுறுத்தியுள்ளார்.

இந்த விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த பெண்ணை எதிர்வரும் 25 ஆம் திகதி விரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் இரண்டு வீடுகளின் உரிமையாளர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டமையினால் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையினைச் செலுத்த உத்தரவிட்டார்.

ஆலய பங்குச் சபை மற்றும் மன்னார் பிரதேச சபை ஆகியவை தமது குற்றத்தை ஒப்புக்கொள்ளாத காரணத்தினால் குறித்த வழங்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதி வரை மன்னார் நீதவான் ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Comments