வவுனியா மாவட்டத்தில் 10 ஆயிரம் பொருத்து வீட்டினை வழங்குவதற்கு ஒவ்வொரு கிராம சேவையாளர்களின் ஊடாக வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வீடொன்றினைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தினை கிராம சேவையாளர்கள் தமது பகுதிகளில் விநியோகம் செய்து வருகின்றனர்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சினால் இந்த விண்ணப்பப் படிவங்களின் விநியோகமானது அரசாங்க அதிபரின் சிபார்சுக்கு அமைவாக இடம்பெற்று வருகின்றது.
கிராம சேவையாளர்களுக்கு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் கடந்த வாரம் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவையாளர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
இதில் ஜக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர்கள் பொருத்து வீடு தொடர்பாக விளக்கத்தினை கிராம சேவையாளர்களுக்கு அளித்தனர்.
குறித்த விண்ணப்பப் படிவத்தினைப் பூரணப்படுத்தி எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆயிரம் வீடுகளில் செட்டிகுளம் பிரதேச செயலகம், வவுனியா வடக்கு பிரதேச செயலகம், வவுனியா தெற்கு பிரதேச செயலகம் மற்றும் வவுனியா நகரம் போன்ற பகுதிகளிலுள்ள பொருத்து வீடு தேவையுடையவர்களுக்கு பொருத்து வீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் எம்.எம். சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.