தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுபட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்

Report Print Navoj in சமூகம்

நாட்டில் புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படும் நிலையில் தங்களுக்குள் இருக்கின்ற கசப்பான உணர்வுகளை மறந்து தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் இறுதிநாள் நிகழ்வு நேற்று (11) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு விடயத்தில் தற்போதுள்ள சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

மாணவர்கள் பிரத்தியேக கல்வி நிலையங்களுக்கு செல்லாமல் பரீட்சைகளில் சித்தி பெறும் நிலையை பாடசாலை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்.

சாதாரண தர உயர்தர பரீட்சைகளில் மாணவர்கள் சித்தி பெறும் போது தங்களின் கல்வி நிலையங்களில் கற்றதன் மூலம் திறமையான சித்திகளைப் பொற்றார்கள் என தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரம் செய்கின்ற இந்த நிலை மாற்றமடைய வேண்டும்.

நாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வுத்திட்டம் கொண்டுவரும் போது தெற்கிலுள்ள பிரதான கட்சிகள் மாறி மாறி எதிர்த்து வந்தன. தற்போது இரண்டு பேரும் இணைந்து இனப் பிரச்சினைக்கு தீர்வுத் திட்டத்தை வழங்க வேண்டும் என்பதை உணர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதனைக் குழப்பும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் செயற்படும் கூட்டு எதரணி முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

புதிய அரசியல் யாப்பு தயாரிக்கும் பணிகளுக்கு கூட அவர்கள் இடையூறாக இருக்கிறார்கள்.

புதிய அரசியல் யாப்பு மூலம் தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வு கிடைத்து விடக் கூடாது என்ற விடயத்தில் மஹிந்த அணி மிகத் தீவிரமாக உள்ளது என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் க.பரமானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, கோறளைப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் நா.குணலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments