உதாசீனம் செய்யுமா? சிந்தித்து செயற்படுமா? மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்

Report Print Navoj in சமூகம்

சர்வதேச ஆணைக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட விடயங்கள் நாட்டுக்கு உரியது என்று சொல்லப்பட்ட விடயங்களே என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் இன்று(12) இடம்பெற்ற புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்

இந்த நாடு ஆலோசகர்களின் ஆலோசனைகளை உதாசீனம் செய்து கவலைக்கிடமாக போகின்றதா? அல்லது இந்தத் திட்டங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்தித்து அதனைச் செய்யப் போகின்றதா? என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

எமது நாடு தற்போது அரசியல் தொடர்பான பல்வேறு குழப்பங்களுக்குள்ளே இருக்கின்றது. தென்னகத்திலும் மற்றும் வடக்கு கிழக்கு போன்ற பிரதேசங்களிலும் ஒரு குழப்பமான நிலைமையே இந்த அரசியல் தொடர்பில் இருந்து கொண்டு இருக்கின்றது.

பாராளுமன்றத்தில் முக்கியமான விடயமாக அரசியல் அமைப்பு மாற்றம் என்கின்ற விடயம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதில் முக்கியமாக 12 விடயங்கள் ஆராயப்படுகின்றன. அதில் ஆறு விடயங்கள் உப குழுவுக்கும் மற்றைய ஆறு விடயங்கள் வழி நடத்தல் குழுவிற்கும் ஆராய விடப்பட்டுள்ளன.

அடிப்படை உரிமைகள், நீதி தொடர்பான விடயங்கள், பொதுநிதி, பொதுச் சேவை, சட்டம் ஒழுங்கு, அதிகாரப்பங்கீடு ஆகிய ஆறு விடயங்கள் தொடர்பாக ஆறு உபகுழுக்கள் அமைக்கப்பட்டு அந்தக் குழுக்கள் ஆராயந்துள்ளன.

ஜனாதிபதி மிக அண்மையில் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பின் போது தான் வெண்தாமரை இயக்கம் போன்ற ஒரு அமைப்பினை உருவாக்கப் போவதாகவும் தென்பகுதி மக்களிடையே தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனை அவர் மேற்கொள்ள வேண்டும். டிலான் பெரேரா அவர்கள் வெண்தாமரை இயக்கதில் இருக்கும் போது உழைத்த அதே உழைப்பை தற்போதும் செய்ய வேண்டும். மங்கள சமரவீர அவர்கள் அதனால் பெற்ற பலாபலனை இந்த மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த நாட்டுக்கு நல்ல மருத்துவர்கள் தேவை அந்த மருத்துவர்களாக ஊடகவியலாளர்கள் இருக்க வேண்டும் என்றால் மக்களுக்கு நிச்சயமான ஆக்கபூர்வமான விடயங்களையெல்லாம் வெளியில் கொண்டு வாருங்கள் என மேலும் தெரிவித்தார்.

Comments