பரந்தன் சந்தியில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கம் ஒன்றின் ஆளுகைக்கு உட்பட்ட எரிபொருள் நிலையத்தில் கடந்த ஐந்து நாட்களாக எரிபொருள் இல்லாமையினால் பெரும் சிரமத்திற்கு உட்படுவதாக சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான சந்தியாக அமைந்துள்ள பரந்தன் சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தை எதிர்பார்த்தே சிற்றூர்தி சாரதிகள் முதல் பார ஊர்தி சாரதிகள் வரை பயணிக்கின்றனர்.
எனினும் இந்த எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் அற்று போவது இது முதல் தடவை அல்ல எனவும், மாதமொன்றில் குறைந்தது இரண்டு மூன்று நாட்கள் எரிபொருள் அற்றுப் போவதனால் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் கூறுகின்றனர்.
மேலும், ஒவ்வொரு மாதமும் எரிபொருள் அற்றுப் போவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை எனவும், இதற்கான ஒரு தீர்வினை பெற்றுத் தருமாறும் சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.