தை திருநாளும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாடும்...! தெரியாதவர் தெரிந்துகொள்ளுங்கள்

Report Print Vino in சமூகம்
220Shares

தைப்பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் சூரியபகவான் மகரராசியில் அடியெடுத்து வைக்கும் தை மாதம் முதலாம் திகதி அன்று கொண்டாடும் உன்னத விழாவாகும்.

இந்நிகழ்வானது இவ்வருடம் ஜனவரிமாதம் 15ஆம் திகதி அமைவதாக ஜோதிடம் கணிக்கின்றது. இத் திருநாளை தாம் இவ்வுலகில் நலமுடன் வாழ உதவி செய்த இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப் பெறுகின்றது.

இவ்விழா சங்க காலத்தில் வேளாண்மைக்கு வேண்டிய மழை நீரையும், சூரிய ஒளியையும், காற்றையும் தேவைக்கேற்ப வழங்கி தம்மையும், நாட்டையும் செழிப்புடன் வாழ உதவிய இயற்கைக்கும் (பூமி, சூரியன், வழிமண்டலம், நீர் நிலைகள் போன்றவற்றிற்கும்) தம்மோடு சேர்ந்து கஷ்டப்பட்டு உழைத்த கால்நடைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாக உழவர்களால் கொண்டாடப்பெற்று வந்துள்ளது.

தற்பொழுது உழவர்கள் மட்டுமன்றி வேறு பல தொழில்புரியும் எல்லா தமிழ் மக்களும் தம் மூதாதையினரான உழவர்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த பண்டிகையாகவும், தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களை (அரிசி, தானியங்கள், மரக்கறி) போன்றவற்றை உற்பத்தி செய்து தரும் ”உழவர்களுக்கு நன்றி கூறும்” நாளாகவும் கொண்டாடுகின்றார்கள்.

அதன் காரணமாக இப்பண்டிகை “உழவர் பண்டிகை” என்னும் பெயர் மழுங்கி ”தமிழர் பண்டிகையாக” பொங்கியெழுந்துள்ளது.

“தைப்பொங்கல் பண்டிகையின் போது உழவர்கள் தாம் அறுவடைசெய்த “புதிரை” (நெற் கதிர்களை) அரிசியாக்கி அதில் பொங்கல் செய்து கொண்டாட, பல்வேறு தொழில் புரிவோர் உழவர்களுடன் பண்டமாற்றுச் செய்து புதிய அரிசியை வாங்கி பொங்கல் செய்து கொண்டாடுகின்றார்கள்.

பொங்கல் என்பதற்கு ”பொங்கி வழிதல்”, ”பொங்குதல்” என்பது பொருள். அதாவது புதிய பானையில் பால் பொங்கி எழுந்து பொங்கி வழிந்து வருவதால், எதிர்காலம் முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கிச் சிறக்கும் என்பதும், களனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதும் இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.

“உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் ஏனையோர் சோற்றில் கை வைக்க முடியும்” என்பது பலரும் அறிந்த பழமொழி. அதனால் போலும் உழவுத் தொழிலின் சிறப்பை கூற வந்த திருவள்ளுவர் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” எனவும், “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என பாரதியாரும் கூறியுள்ளனர்.

மழை பொய்த்துவிட்டால் வேளாமையும் பொய்த்து விடும் என்பதனை கூறவந்த “திரைக்கவித் திலகம் மருதகாசி “ பூமியிலே மாரி (மழை) எல்லாம் சூரியனாலே, பயிர் பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே” என்று கூறினார்.

சூரியனால் மழையும், பயிர் வளர்ச்சியும், மழையினால் போதிய நீரும், அதிக விளைச்சலும் உண்டாகின்றன என்பதனை உணர்ந்த எம் மூதாதயினர் மழைக்கு மூலகாரணியாக விளங்கும் சூரியனை அறுவடைக் காலத்தில் வணங்கி தாம் பெற்ற நெல்மணியில் பொங்கி விருந்து படைத்து நன்றிக் கடன் செலுத்துவது மரபாகி வந்துள்ளது.

இலங்கையில் ஒருவருடத்தில் மூன்று போகம் நெல் சாகுபடிசெய்யும் வளம் சில பகுதிகளில் காணப்படுகின்றன. அங்கே நீர்ப்பசன வசதிகளும் ஆறுகளும் அவற்றிற்கு சாதகமாக அமைந்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் இருபோகம் விவசாயம் செய்யும் வசதிகள் இருந்துள்ளன, அதற்கு அங்கு காணப்பெறும் பெருங் குளங்களே காரணமாகும்.

யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இங்கு ஆறுகளோ, பெரிய குளங்களோ இல்லாத காரணத்தால் வானம்பார்த்த பூமியாக மழைநீரை நம்பி ஒரு போகமே வேளாண்மை செய்யப் பெறுகின்றது.

மழைவீழ்ச்சி கிடைக்கும் வருட இறுதிக் காலாண்டுப் பகுதியிலே இம்மாவட்டத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. மழை நீரை சிறிய குளங்கள், குட்டை, துரவுகளில் சேமித்து வைத்து மழை குறைந்த காலத்தில் நீர்பாச்சுகின்றார்கள்.

புரட்டாதி மாதம் முடிவடைந்த பின்னர் மழைவீழ்ச்சி ஆரம்பமாகும் நேரத்தில் யாழ் விவசாயிகள் தங்கள் நிலங்களை பண்படுத்தி, உழுது, நெல் விதைப்பார்கள்.

அதன் பின் பருவத்தில் களையெடுத்து, பசளையிட்டு கண்ணும் கருத்துமாக பாராமரித்து வருவார்கள். இக் காலப்பகுதியில் பயிரிடம்பெறும் நெல் மார்கழி தை மாதத்தில் விளைந்து அறுவடைக்கு தயாராகிவிடுகின்றது.

விவசாயிகளுக்காக மழை பெய்யாமல் போய்விடுமோ என்று எல்லோர் மனமும் அச்சம் அடைகின்றன. அனைத்து உள்ளங்களும் விவசாயிகளுக்காக மழை பொழியும் படி பிராத்தனை செய்யுங்கள்.

Comments