பாடுபட்டு உழைக்கும் உழவர் தம் பெருமையை உணர்வு பூர்வமாக போற்றும் நாள் தைத்திருநாள்

Report Print Thamilin Tholan in சமூகம்
38Shares

இறைவனின் இனிய படைப்பு இவ்வுலகம். இயற்கையை இனிய தெய்வங்களாக வழிபட்டவர்கள் தமிழர்கள். இயற்கை எமக்குத் தந்த வாழ்வுக்கு நன்றி கூறும் நன்னாளாகத் தைத்திங்கள் நாளைப் போற்றி வழிபடும் மரபு தொடர்கிறதாக சிவபூமி அறக் கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி - ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார் .

உலகளாவிய ரீதியில் இன்று (14) கொண்டாடப்படுகின்ற தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பொங்கிப் படைத்து வழிபாடு செய்யும் மரபு சைவத் தமிழர்களின் மரபு என்பதை அனைவரும் அறிவர். தினம் கண்ணால் கண்டு வழிபடும் இயற்கைத் தெய்வமாகிய பகலவனுக்குத் தைப்பொங்கல் நாளில் படைத்து மன்றாடுவதுடன் உறவை வலிமைப்படுத்தும் நாளாகவும் இத் திருநாளைப் பேணி வருவது எமது பண்பாடாகும்.

இத் திருநாளில் தாம் வாழும் இல்லங்களின் முற்றத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக நின்று பொங்கிப் படைப்பதும், உறவினர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து பரிமாறி உண்பதுவும், வழக்கமாகும்.

எம் மூதாதையர்கள் தினமும் மண்ணைத் தொட்டுக் கும்பிட்டு வணங்கியே தமது காரியத்தைத் தொடங்கினார்கள். எம்மைத் தாங்கும் நிலத்தைப் பூமாதேவியாகக் கருதினார்கள்.

விளையும் நிலங்களில் நடமாடும் போது செருப்பு அணிவதில்லை. அக் காலத்தில் நிலத்தை நேசித்தல் என்பது முதன்மை பெற்றது.

மண்ணைத் தொட்டும், விண்ணைப் பார்த்தும் நித்தியம் வழிபாடு செய்யும் நெறிமுறையின் அர்த்தம் மிகவும் ஆழமானது.

எனவே, தைப்பொங்கல் திருநாளை அனைவரும் இயற்கைக்கு நன்றி கூறும் திருநாளாகப் பேணி வழிபாடு செய்தல் வேண்டும்.

எம் மண்ணில் நல்ல வண்ணம் அனைவரும் வாழ வேண்டி, அனைவருக்கும் இதயபூர்வமான பொங்கல் நல்வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Comments