வடமாகாண கிரிக்கெட் விளையாட்டுத்துறையை விருத்தி செய்ய நடவடிக்கை!

Report Print Thileepan Thileepan in சமூகம்
69Shares

வடமாகாணத்தின் கிரிக்கெட் விளையாட்டுத்துறையை விருத்தி செய்ய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தலைவரும், பிரதி சபாநாயகரமான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (13) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட கிரிக்கெட் சம்மேளனங்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது.

வடமாகாணத்தில் திறமையான விளையாட்டு வீரர்கள் இருந்தும் அவர்கள் தேசிய அணியில் இணையக் கூடியளவுக்கு இன்னும் வரவில்லை.

போதியளவிலான பயிற்சி இல்லாமையே அதற்கு காரணம். இவ்வாண்டு வடமகாணத்தில் இருந்து இலங்கையின் ஏ அணி, மற்றும் தேசிய அணி என்பவற்றில் விளையாட்டு வீரர்கள் பங்கு பற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

அதற்காக நாம் வடமாகாணத்தின் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர்களுக்கான சிறந்த பயிற்சிகளையும் வழங்கவுள்ளோம். பயிற்சி மையம் ஒன்றையும் நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளோம்.

முதல்கட்டமாக மூன்று மாவட்டங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் கிரிக்கெட் சம்மேளனங்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் பெறுதியான விளையாட்டு உபகரணங்கள் இன்று வழங்கப்படுகிறது.

உங்களுடைய கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாகவும், நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் கூறியுள்ளீர்கள். இது தொடர்பில் எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், கிரிக்கெட் பயிற்சிவிப்பாளர்கள், கிரிக்கெட் வீரர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Comments