இலங்கை முகம் கொடுக்கவுள்ள பாரிய சிக்கல்

Report Print Nivetha in சமூகம்
255Shares

நாட்டில் வறட்சியான காலநிலை தொடருமாயின் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் உள்ள குடிநீரின் அளவு இன்னும் இரண்டு மாதங்களுக்கு மாத்திரமே போதுமானதாக அமையும் என கூறப்பட்டுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அம்பத்தலே, தெற்கு இரண்டாவது கட்ட வேலைத்திட்டத்தை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தொழிலாளர் சங்கம் கூறியுள்ளது.

தனியாருக்கு அந்த திட்டம் வழங்கப்படுவதன் ஊடாக, நீரை அந்த பிரிவிடமிருந்து மீ்ண்டும் விலைக்கு வாங்கும் நிலை ஏற்படும் என்று அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் உபாலி ரத்ணாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக நீர் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் வரும் பிரச்சினைகளை இலங்கை எவ்வாறு எதிர்க்கொள்ள போகின்றது என்பது மக்கள் மத்தியில் எழும் வினாவாக காணப்படுகின்றது.

தற்போதைய நிலைமைகளில் நீர் வழங்கல் மீதான கட்டுப்பாடுகள் தொடர்கின்ற நிலையில், குருநாகல் பகுதிகளில் நீர் விநியோகம் குறைவடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர் வழங்குவதற்காக நீர் பாய்ச்சும் வாகனங்களை பயன்படுத்துவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் 3 ஆயிரம் மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கான உடன்படிக்கையில் இலங்கையும் இந்தியாவும் நேற்று கைச்சாத்திட்டுள்ளன.

இந்த திட்டத்துக்காக 300 மில்லியன் ரூபாவை இந்தியா வழங்கவுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 3 ஆயிரம் குடும்பங்களுக்கு இதனூடாக மழைநீர் சேகரிப்புத் தாங்கிகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

அத்துடன், இந்த மழைநீர் சேகரிப்புத் தாங்கியின் செயற்பாடு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

வடக்கில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் எதிர்பார்ப்பில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments