இலங்கையிலிருந்து இளைஞர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு செல்ல முயன்றதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
உறவினர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் உயிர் பாதுகாப்புக் கருதியே தமிழகத்திற்கு தப்பிச்சென்றதாகவும் குறித்த நபர் இந்திய பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மன்னார் – பேசாலை பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை தனுஷ்கோடி பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
குறித்த நபருக்கு குடும்பத்தகராறு காரணமாக, நீதிமன்றம் வரை பிரச்சினை கொண்டு செல்லப்பட்ட நிலையில், மனைவியின் உறவினர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, 60,000 ரூபாவை செலுத்தி படகுமூலம் தனுஷ்கோடி செல்ல முயற்சித்துள்ளார் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தனுஷ்கோடி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடவுச் சீட்டின்றி சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.