உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பண்பாட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று(14) காலை பொங்கலை சிறப்பிக்கும் வகையில் விசேட நிகழ்வுகளும் பண்பாட்டு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்லடி டச்பார் இஞ்ஞாசியார் தேவாலயத்தில் விசேட பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றன.
மதங்களிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வினையும் ஏற்படுத்தும் வகையில் இந்த பொங்கல் பண்பாட்டு திருப்பலி இடம்பெற்றுள்ளது.
அத்துடன்,கல்லடி டச்பார் இஞ்ஞாசியார் தேவாலயத்தின் பங்குத்தந்தை எஸ்.ரொசான் தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
இதேவேளை, பொங்கல் பொங்கப்பட்டு, பொங்கல் பண்பாட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில், அருட்தந்தை சற்குணநாயகம் தலைமையில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் விசேட பொங்கல் பண்பாட்டு திருப்பலி இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் ஆசிவேண்டி விசேட ஆராதனை நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.