வடக்கு மாகாண சுகாதார அபிவிருத்தி தொடர்பான சர்வதேச கலந்துரையாடல் கனடாவில் ஆரம்பம்

Report Print Theesan in சமூகம்
67Shares

வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள்கட்டமைப்பு தொடர்பான சர்வதேச உயர்நிலை மாநாடு ஆரம்பமாகியுள்ளது.

கனடா நாட்டின் ஒன்ராரியோ மாநிலத்தில் நேற்று முன்தினம் இந்த மாநாடு ஆரம்பமாகியது.

முதல் நாள் கல்வி அபிவிருத்தி தொடர்பான உயர்நிலை கலந்துரையாடல் நடைபெற்றுள்ள நிலையில் நேற்று சுகாதார துறை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பமாகியது.

இது இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கத்தின் ஊடக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும்,

கடந்த வருடம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் கனடாவுக்கு சென்றிருந்த வேளை இலங்கை வாழ் புலம்பெயர் துறைசார் நிபுணர்களையும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

அதன் பலனாக கனேடிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர் உறவுகளின் நிதியுதவியுடன் வடக்கில் போரினால் பாதிக்கப்பட்டு காயமடைந்து சுயமாக இயங்கமுடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை வழங்கும் நடமாடும் சுகாதார சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கனேடிய தமிழர் பேரவையின் ஒழுங்குபடுத்தலில் இவ்வருடம் தை மாதம் 16ம்,17ம்,18ம்

திகதிகளில் கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பான உயர்நிலைமட்ட கலந்துரையாடலொன்று ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

முதல்நாள் கல்வி தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றுள்ள நிலையில் 2ம், 3ம் நாட்கள் சுகாதார துறைசார் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது.

இதில் முதல்நாள் அமர்வின்போது வடக்கில் வாழுகின்ற மாற்றுதிறனாளிகள் தொடர்பில் முக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சருடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜாவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments