சர்வதேச கொக்கேய்ன் போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் இலங்கையில் இருந்தால், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப் பொருள் தொடர்பான வழக்கு இன்று(18) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் இருந்து அண்மையில் 928 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் நிறைவு பெறவில்லை என போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
இதன்படி முன்வைக்கப்பட்ட வாதங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார, விசாரணைகளை துரிதமாக முடித்து வழக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.