கிளிநொச்சியில் நேற்று செவ்வாய் கிழமை (17) விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வடக்கு மாகாண விவசாய அமைச்சரும், பதில் முதலமைச்சருமான பொ.ஜங்கரநேசன் பாராளுமன்ற உறுப்பினா்களான சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.
தற்போது நாட்டில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக எதிர்வரும் மாதங்களில் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்க்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படும் என்பதனால் வரும் இருப்பதாம் திகதி முன்னர் ஜனாதிபதி செயலகத்தினால் வறட்சியினால் ஏற்படும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் அதனை எதிர்க்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடா்பில் அறிக்கை ஒன்றை அனுப்புவதற்காகவும் விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது.
இதன்போது மாவட்டத்தின் வறுமை தொடா்பில் ஆராயப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட புள்ளிவிபரத் தரவுகளில் கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை 12.8 வீதம் எனவும், ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் போசாக்கு மட்டத்தில் கிளிநொச்சி இலங்கையில் 25 ஆவது இடத்தில் இருக்கிறது எனவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது கேள்வி எழுப்பிய வடக்கு மாகாண சபை உறுப்பினர் இந்தக் கணிப்பீடுகள் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த மாவட்ட புள்ளிவிபரவியலாளர் பி.பாலச்சந்திரன்,
இங்கு காட்டப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் பழையது, அது 2012 ஆம் ஆண்டிக்குரிய தகவல்கள், தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதேவேளை, 2016 ஆண்டின் தகவல்களின் படி கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை வீதம் 20.8 வீதமாக காணப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதேச செயலக பிரிவுகளின் படி கரைச்சியில் 20.36 வீதமும், பச்சிலைப்பள்ளியில் 18.64 வீதமும், பூநகரியில் 22.71 வீதமும், கண்டாவளையில் 21.13 என வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் வீதம் காணப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.