உபுல் ஜயசூரிய முதலீட்டுச் சபையின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படக்கூடிய சாத்தியம்

Report Print Kamel Kamel in சமூகம்

சிரேஸ்ட சட்டத்தரணி உபுல் ஜயசூரிய இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹொரண டயர் உற்பத்திச்சாலை காணி கொள்வனவு சர்ச்சை தொடர்பில் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஹொரண டயர் உற்பத்திச் சாலைக்கான காணி நந்தன லொக்கு விதானகேவிற்கு சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஊழல்களுக்கு எதிரான முன்னணியின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சட்டவிரோத காணிக் கொடுக்கல் வாங்கலுக்கு இணங்காத காரணத்தினால் உபுல் ஜயசூரிய தனது பதவியை இழக்க நேரிடலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த உற்பத்திச்சாலைக்கான காணி ஒரு ஏக்கர் ஒரு அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் உண்மையில் ஒரு ஏக்கர் 3850 அமெரிக்க டொலர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் அரசாங்கத்திற்கு ஒரு ஏக்கருக்கு 3849 டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மொத்தமாக 100 ஏக்கருக்கு 384900 டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கு கூடுதலாக பணம் செலுத்த முடியாது எனக் கூறிய காரணத்திற்காக நேற்றைய தினம் இலங்கை நிலக்கரிக் கூட்டுத்தாபனத் தலைவர் மைத்திரி குணரட்ன பணி நீக்கப்பட்டதாகவும் இதே நிலைமை உபுல் ஜயசூரியவிற்கும் ஏற்படும் எனவும் உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

Comments