ஓமந்தையிலுள்ள முகாம் அகற்றப்படவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஓமந்தை முகாம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இராணுவப் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார்.
ஓமந்தை முகாமுக்கு அருகில் உள்ள பொதுமக்களின் 18 ஏக்கர் காணிப்பிரச்சினை தொடர்பான நடவடிக்கைகள் வவுனியா அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஓமந்தை முகாமுக்கு அருகாமையிலுள்ள காணிதொடர்பில் பொதுமக்கள் உரிமை கோரினார்கள்.
இதற்கு இராணுவத்தினரால் தீர்வுகாண முடியாது என்பதனாலேயே இந்த காணி தொடர்பான நடவடிக்கைகள் அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஓமந்தையிலுள்ள முகாம் அகற்றப்படவில்லை. காணி தொடர்பிலேயே தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.