கிழக்கு முதலமைச்சரின் அரசியல் தலையீடா: இடை நடுவில் ஓய்ந்துபோன கட்டிட வேலை

Report Print Reeron Reeron in சமூகம்

வாழைச்சேனை கோறளைப் பற்று பிரதேச சபைக்குரிய காணியில் கடைத் தொகுதியின் கட்டுமானப்பணிகள் அரசியல் தலையீடு காரணமாக இடை நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் ஒருவித அசம்பாவித நிலைமை ஏற்பட்டதையடுத்து பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

குறித்த கலந்துரைடலின்போது கோறளைப் பற்று பிரதேச சபைச் செயலாளர், வாழைச்சேனை வர்த்தக சங்கத் தலைவர்கள், முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள், கிராம அவிருத்திச் சங்க உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதேச சபைக்குரிய கணிக்குள் நிரந்த கட்டிடமாக அமைத்து அதில் 4 முஸ்லிம்களுக்கும், 2 தமிழர்களுக்கு பிரதேச சபையினால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச சபைக்குரிய காணியில் கட்டப்பட்ட கடைத் தொகுதி இடை நிறுத்தப்பட்டமைக்கு அரசியல் தலையீடுகள் தான் காரணமென தமிழ் மக்கள் தரப்பில் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந் நிலையில், குறித்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்தியது மட்டுமின்றி கிழக்கு முதலமைச்சர் உத்தரவுக்கு அமைய இடித்து உடைக்குமாறு பணிக்கப்பட்டதாக பல்வேறுபட்ட வாதப் பிரதி வாதங்கள் கலந்துரையாடலின்போது இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த கோறளைப் பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.சீகாப்டீன், கோறளைப் பற்று பிரதேச சபைக்குரிய பழைய காணிக்குள் ஆறு வியாபார சகோதர்களுக்கான கடைத்தொகுதி கட்டுமான ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குறித்த இடத்தில் பல சர்ச்சைகள் ஏற்பட்டன.

குழப்பகரமான நிலையை தொடர்ந்து திணைக்களத்தின் ஆலோசனை வழிகாட்டல் கிடைக்கப் பெறும் வரை குறித்த இடத்தில் கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்திருக்கின்றேன்.

குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு முதலமைச்சருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் ஒரு சட்ட ஆலோசனை குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அதன் பின் பிரதேச சபையின் உரித்து உமையையும், காணியை உரிமை கோருகின்றவர்களிடத்தில் இருக்கும் ஆவணங்களையும் பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் அதனடிப்படையில் இறுதி தீர்மானங்கள் எடுக்கப்படுமென தெரிவித்தார்.

கிழக்கு முதலமைச்சரின் அழுத்தத்தினால் குறித்த கடைத் தொகுதிக்கான வேலை இடை நிறுத்தப்படவில்லை என மறுதலித்ததுடன், கலந்துரையாடலில் கலந்துகொண்ட அனைவருக்கம் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்ததுடன், குறித்த காணி பிரதே சபைக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன்,

இரண்டு சமூகங்களுக்கிடையில் இன ரீதியான குழப்பங்களை ஏற்படுத்த சிலர் செயற்படுவதாக நான் அறிகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சா.வியாளேந்திரன் தெரிவித்தார்.

இரண்டு சமூகங்களுக்கிடையில் இன ரீதியான குழப்பங்களை ஏற்படுத்துவது எங்களுடைய நோக்கம் இல்லை. இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்த சிலர் செயற்படுவதாக நான் அறிகின்றேன்.

பிரதேச சபை முன்னெடுத்த கடை நிர்மானிக்கும் வேலை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. பின்புலத்தில் அரசியல் அழுத்தமோ அல்லது வேறு என்ன அழுத்தம் இருந்ததோ என்று எங்களுக்கு தெரியாது.

இவ்விடயம் தொடர்பாக வாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், சிவில் சமூகம் சேர்ந்த பலர் எங்களோடு தொடர்பு கொண்டு பிரதேச சபை கடை நிர்மானம் ஆரம்பிக்கப்பட்டு இடை நிறுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் எதை பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் என கேட்டனர். இரண்டு சமூகங்களுக்கும் நன்மை பெறக் கூடிய வேலைத் திட்டங்கள் இடை நடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதைப்பற்றி யாரும் பேசவில்லை. யாரும் சொல்லவில்லை என்று மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களிடம் பல்வேறுபட்ட கேள்விகளை எழுப்பியதுடன், இணையத்தளம் மற்றும் பத்திரிகை வாயிலாகவும் வந்துள்ளது.

கட்டட வேலைகள் இடை நிறுத்தப்பட்டமை தொடர்பாக பிரதேச சபை செயலாளரிடம் ஏதும் அழுத்தங்கள் உள்ளதாக என கேட்டேன். அவர் ஏதும் அழுத்தங்கள் இல்லை. தான் தான் வேலையை இடை நிறுத்தி உள்ளேன். எனது மேல்மட்ட திணைக்களத்திடம் இருந்து ஒத்துழைப்பை எதிர்பார்த்து இடை நிறுத்தி உள்ளேன் என்றார்.

ஆகவே இடை நிறுத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம். இது தொடர்பாக பிரதேச சபை செயலாளர் தங்களுடைய திணைக்களத்துடன் கலந்துரையாடி வேலைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளார் என தெரிவித்துள்ளார் என்றார்.

Comments