முன்னாள் போராளிகளுக்கு 250,000 ரூபா கடன் உதவி..! திருமலையில் இடம்பெற்ற பயிற்சிப்பட்டறை

Report Print Victor in சமூகம்

முன்னாள் போராளிகளுக்கான தொழில் பயிற்சிப்பட்டறை திருகோணமலை, உப்புவெளியிலுள்ள முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி நிலையத்தில் கடந்த இரு நாட்களாக இடம்பெற்றன.

மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டிலும், புனர்வாழ்வு அமைச்சாலும் நடத்தப்பட்ட இரு நாள் பயிற்சிப்பட்டறையில் முதற்கட்டமாக முன்னாள் போராளிகள் 60 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் போராளிகள் தங்களுக்கான தொழில்களைத் தெரிவுசெய்வதற்கான வழிகாட்டல் நடவடிக்கைகள் இப்பயிற்சிப்பட்டறையில் வழங்கப்படுவதாக புனர்வாழ்வு அதிகாரசபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நாகலிங்கம் புவனேந்திரன் தெரிவித்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் வங்கிகளுடன் இவர்களைத் தொடர்புபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தொழிலுக்கான கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிராந்திய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றினூடாக இவர்களுக்கு நீண்டகலாக் கடன் அடிப்படையில் 250,000 ரூபாய் கடன் தொகையைப் பெறுவதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கப்படவுள்ளது.

இக்கடன் தொகைக்கான 4 சதவீத வட்டியை இவர்களிடமிருந்து பெறுவதுடன், எஞ்சிய 8 சதவீத வட்டியைப் புனர்வாழ்வு அமைச்சு செலுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இவர்களை சமூகமயப்படுத்தப்பட்ட பயிற்சியாளர்கள் என்று தாம் அழைப்போம் எனவும் அவர் கூறினார். இக்கடன் திட்டம் கிளிநொச்சியில் 60 பேருக்கும் முல்லைத்தீவில் 61 பேருக்கும் எதிர்வரும் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் 101 பேருக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Comments