செங்கலடி பிரதேச செயலகத்தின் சவுக்கடி கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தனியார் காணிகளை அத்துமீறி தன்வசப்படுத்தும் முயற்சியில் அங்கு வாழும் மற்றும் ஒரு இனத்தவர்கள் முற்பட்ட நிலையில் இன்றைய தினம் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த கிராம சேவகர் பிரிவிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அந்த பகுதியில் வாழும் வேறு இனத்தவர்கள் போலியான காணி உறுதிப் பத்திரங்களை வைத்துக் கொண்டு இரவோடு இரவாக தன்வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், தங்களின் காணிகளை பார்க்கச் சென்றால் துப்பாக்கியால் சுடுவேன் என அச்சுறுத்துவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், பல தடவைகள் குறித்த காணி விடயம் தொடர்பாக பல்வேறு அதிகாரிகளிடம் கூறியுள்ள போதிலும், எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையல், குறித்த இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் சென்றிருந்த நிலையில், ஒன்றுகூடிய பொது மக்கள் அத்துமீறி காணிகளில் வேலி அமைத்துள்ளவர்களின் கெடுபிடிகளை தெளிவுபடுத்தியிருந்தனர்.
இதனையடுத்து, பொது மக்களின் ஆத்திரத்தின் உச்ச வெளிப்பாடாக தங்கள் காணிகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள வேலிகளை பிடிங்கி எறிந்தனர்.
இதேவேளை, காணிகளை கையகப்படுத்தியிருந்த தரப்பினர் பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, குறித்த பகுதிக்கு ஏறாவூர் பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.
அத்துடன், குறித்த காணி தொடர்பான மேலதிக விசாரணைகள் நடத்தப்படும். அதுவரைக்கும் குறித்த காணிக்குள் எவரும் பிரவேசிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.