வடக்கு மாகாணத்தில் அதிக நிலப் பரப்புடைய மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம். இலங்கையிலேயே மிகவும் வறுமையான மாவட்டமும் முல்லைத்தீவு மாவட்டம்தான்.
அதற்கான காரணம் அரச நிர்வாகமே என பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் உலக வங்கியின் மூலோபாய சமூக மதிப்பீட்டு கலந்துரையாடல் கருத்தரங்கு நேற்று யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
அதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், மாவட்ட நிலப்பரப்பு பெரியதேயன்றி அந்த நிலங்கள் அங்கு வாழும் மக்களுக்குச் சொந்தம் கிடையாது.
அவ்வாறானால் எவ்வாறு மாவட்டம் அபிவிருத்தியடைய முடியும்?. இந்த மாவட்டத்தின் நிலப் பரப்புக்கள் மக்களுக்குத்தான் சொந்தமில்லை என்றால் அடுத்தபடியாக மக்களோடு நேரடித் தொடர்பான அரச நிர்வாகமான பிரதேச செயலகத்திடமேனும் கிடையாது.
மக்களால் எந்த வகையிலும் நேரடித் தொடர்பைப் பேணாத வனவளத் திணைக்களத்திடம் அவை அகப்பட்டுள்ளன. அங்கு நிலம் தொடர்பாக மாவட்டச் செயலாளரோ அல்லது ஒருங்கிணைப்புக் குழுக்களோ முடிவுகளை எட்ட முடிவதில்லை.
இது அந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்குப் பெரும் தடையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். நிகழ்வில் யாழ். மாவட்ட மாதர் சங்கப் பிரதிநிதி கருத்துத் தெரிவித்தார். அவர் கூறியதாவது,
போரால் பாதிப்படைந்த பெண்கள் தற்போது குடும்பங்களை நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் இல்லை. அரச உதவிகளும் கிடைப்பதில்லை.
இங்குள்ள நிதி நிறுவனங்கள் பெண்களையே இன்னல்களுக்கு உள்ளாக்குகின்றன. பலரும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். அதன் உச்சக் கட்டமாக அண்மையில் ஓர் பெண்மணி நிதி நிறுவனங்களின் கொடுமையால் சாவடைந்தார் என குறிப்பிட்டுள்ளார்.