தீர்விற்கான உரிமைப் போராட்டமே எழுக தமிழ்!

Report Print Rusath in சமூகம்

இதுவரையில் தீர்வு எட்டப்படாத விடயங்களுக்கு தீர்வினைத்தாருங்கள் என மக்கள் அனைவரும ஒன்றிணைந்து உரத்த குரலில் கேட்கும் நிகழ்வே எழுக தமிழ் என என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரான ரி.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த போராட்டத்தினால் சுமார் 99,000 விதவைகள் பொருளாதாரங்களைக் கட்டியெழுப்ப முடியாத நிலையில் வடக்கு கிழக்கில் வாழ்ந்து வருகின்றார்கள்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் போரில் ஈடுபட்ட சுமார் 20,000 மேற்பட்டவர்கள் தற்போது வரை மிகவும் கஷ்டமான நிலையில் வசித்துக் கொண்டிருக்கின்றார்கள். பல இளைஞர் யுவதிகள் தொழில் இன்றி இருக்கிறார்கள்.

இலங்கையில் போர்க்குற்றம் நடைப்பெற்றுள்ளது. ஆனால் இன்று வரையில் அதற்குரிய விசாரணைகளும், தீர்வுகளும் சாத்தியப்படவில்லை.

சர்வதேச விசாரணையோ, உள்ளக விசாரணையோ நடைபெறவில்லை. 60 வருடங்களுக்கு மேலாக எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற இந்நிலையில் அவற்றுக்குரிய தீர்வு என்ன, அத்தீர்வு எழுத்துருவாக்கப்பட வேண்டும் போன்ற நோக்கங்களுக்காகவே தமிழ் மக்கள் போரவை உருவாக்கப்பட்டது.

தற்போது இப்பேரவை உப குழுக்களை உருவாக்கி இவற்றை தயாரித்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் குழு தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் ஒன்றை தயாரித்து அதன் பிரதிநிதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும், கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தீர்வுத்திட்டத்திலுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இவற்றைக் கவனத்திலெடுக்க வேண்டும் என்ற நோக்கோடு தமிழ் மக்கள் பேரவை சில விடயங்களைத் திட்டமிட்டு செய்து வருகின்றது.

அதன் ஒரு அங்கமாகத்தான் வடக்கிலும், கிழக்கிலும் எழுக தமிழ் என்ற நிகழ்வை ஏற்பாடு செய்து வருகின்றது.

அந்த வகையில் வடக்கில் சென்ற வருடம் செப்டெம்பர் 24 ஆம் திகதி எழுக தமிழ் நடைபெற்றது. கிழக்கில் மட்டக்களப்பு நாவற்குடா மைதானத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி எழுக தமிழ் நிகழ்வொன்று நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எமக்கு நாம் எல்லாம் எதிர்பார்க்கின்ற சமஸ்டி ரீதியிலான தீர்வு ஒன்று வரவேண்டும் என மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உரத்த குரலில் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், வடக்கு கிழக்கு இணைக்கப்படல் வேண்டும். காணி அபகரிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, தமிழ் மக்கள் அதிகளவு வாழும் பிரதேசங்களில் புத்த பிரானுடைய சிலைகள் வைக்கப்படுகின்றன, கைது செய்யப்படவர்கள் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை, காணாமல்போனோர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை.

இதற்கெல்லாம் எமக்கு தீர்வு தாருங்கள் என நாம் அனைவரும் ஒன்றிணைந்து உரத்த குரலில் கேட்கும் நிகழ்வு தான் எழுக தமிழ் நிகழ்வு என ரி.வசந்தராஜா இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments