யாழ். நெடுந்தீவுக்கான நெடுந்தாரகை படகுச்சேவை நாளை முதல் குறிகட்டுவானிலிருந்து ஆரம்பிக்கப்படும் என வடமாகாணப் பதில் முதலமைச்சரும், விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவான் ஆகிய பகுதிகளின் மக்களின் வேண்டுகோளுக்காக இச்சேவை, பூர்த்தி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இப்படகு சேவைக்கான திட்டங்கள் நெடுந்தீவு பிரதேச சபையின் ஊடாக உலகவங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டன.
150 மில்லியன் ரூபா செலவில் இப் படகுச் சேவைக்கான அனைத்துச் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வடமாகாணப் பதில் முதலமைச்சரும் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தலைமையிலான ஆறு பேர் அடங்கிய குழுவினர் நேற்று குறிகட்டுவான் இறங்குதுறைப் பகுதிக்குச் சென்று அங்கு புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தாரகை படகுச்சேவையினைப் பார்வையிட்டனர்.
அத்துடன் படகு ஓட்டுனர்களுடன் மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் இக் குழுவினர் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது நெடுந்தீவு, ஊர்காவற்துறை, வேலணை ஆகிய பிரதேச செயலாளர்கள்,பிரதேச சபையின் செயலாளர்கள் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்தப் படகில் 250 பேர் அமர்ந்து பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.