சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Report Print Agilan in சமூகம்
55Shares

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த போராட்டத்தில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ள நிலையில் இன்றைய தினம் பலரும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்குதல் நிறுத்தப்பட வேண்டும்.

மருத்துவக்கல்வி, மருத்துவத்துறை மற்றும் நோயாளர் பராமரிப்புச் சேவை என்பவற்றின் தரத்தை உறுதிப்படுத்தவும் அவை சார்ந்த விடயங்களை கையாள்வதற்கும் இலங்கை மருத்துவ சபை மாத்திரம் எவ்வித அரசியல் தலையீடுகளும் இன்றி சுயாதீனமாக செயற்பட வேண்டும்.

தனியார் மருத்துவ கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்களின் எதிர்கால நலன்கருதி இலங்கை மருத்துவ சபையினால் சுயாதீனமாக அவர்களுக்கு பொருத்தமான தீர்வு வழங்கப்பட வேண்டும்.

தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் நிவில் பெர்ணான்டோ வைத்தியசாலை முற்று முழுதாக அரசமயமாக்கப்படுவதுடன் இலங்கை மருத்துவ சபையினால் சுட்டிக்காட்டப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு அரச மருத்துவ பீடமாக்கப்பட வேண்டும் போன்றதான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.

இதேவேளை கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் ஆரம்பமான எதிர்ப்பு பேரணி லிப்டன் சுற்று வட்டத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வீதி மூடப்பட்டுள்ளது

மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டமானது தற்போது கொள்ளுப்பிட்டி சந்தியை வந்தடைந்துள்ளது.

இதன் காரணமாக காலிமுகத்திடல் வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.

Comments