இந்தியாவின் தமிழ் நாட்டில் தமிழரின் பண்பாட்டு மரபான ஜல்லிக்கட்டை நடாத்துவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தமைக்கும், இந்திய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாழைச்சேனையில் இன்று(19) மாலை பாரிய கண்டனப் பேரணி இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை - கோறளைப்பற்று பிரதேச இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் பேரணியானது கிண்ணையடி சந்தியில் இருந்து ஆரம்பமாகி வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக வந்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தி வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டப் பேரணியில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு தமிழரின் பண்பாட்டு மரபினை அழிக்காதே, தமிழரை அடக்காதே என இந்திய அரசுக்கு எதிராக பல கோசங்களை எழுப்பியுள்ளனர்.
அத்தோடு, மரபு வழி தமிழ் தேசியத்தின் பண்பாட்டு மரபினை அழித்து தமிழின அடையாளங்களை அழிக்க வெறி கொண்டு கொக்கரிக்கும் இந்திய அரசே உலகத் தமிழர்கள் உன் கொட்டத்தை அடக்க திரண்டெழுவார் குறித்துக் கொள் என்ற வசனம் பொறிக்கப்பட்ட பதாதையுடன் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும்,சோழனின் கொடி பறக்கும் சோழியின் குடும்பி அறும், அலங்கா நல்லூர் ஆடும் வரை ஈழம் அடங்காது, ஜல்லிக்கட்டு எம் உரிமை அள்ளிக்கட்டு அரசை, போராட்டம் எம் இனக்குணம் சீண்டாதே சிதறுவாய், எமது மொழி எமது பண்பாடு, எமது தனித்துவம், நாங்கள் தமிழர்கள் என பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோசங்களுடன் இளைஞர் கலந்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.