வவுனியா - செட்டிக்குளம் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் காணப்படும் மாங்குளத்தில் பொதுமகன் ஒருவர் கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான குளத்துக் காணியில் அத்துமீறி பாதையமைத்ததையடுத்து அதனை கமநல உத்தியோகஸ்தர்கள் இன்று அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டமையால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
செட்டிக்குளம் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் காணப்படும் மாங்குளத்தில் பொதுமகன் ஒருவர் கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான குளத்துக் காணியில் அத்துமீறி பாதையமைத்தமையினையடுத்து கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் இரண்டு தடவைகளுக்கு மேல் கடிதம் மூலம் உத்தியோகபூர்வமான அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து, பொதுமகனால் கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு இந்த பாதையினை ஒரு சில வாரங்களில் அப்புறப்படுத்துவதாக பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
எனினும் இந்த பாதை அகற்றப்படாததை அடுத்து இன்று மாலை மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஆர்.விஜயகுமார், செட்டிக்குள கமநல உத்தியோகஸ்தர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
அத்துடன், குளத்தினுள் பொதுமகன் ஒருவரால் அமைக்கப்பட்ட பாதையினை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு அப்புறப்படுத்துவதை நிறுத்துமாறு தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த இடத்தில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் செட்டிக்குள பொலிஸாரின் தலையீட்டால் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஆர்.விஜயகுமார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்வதாக கூறியுள்ளார்.
செட்டிக்குள பிரதேச பிரிவில் காணப்படும் முல்லைக்கல் குள காணியிலும் அடாத்தாக பாதை இன்று அமைத்து கொண்டிருப்பதாகவும், அதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் கோரி கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தரால் செட்டிக்குள பொலிஸில் 2000ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 83வது பிரிவின் கீழ் முறைப்பாடும் இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.