இலங்கை கிரிக்கட் அணியின் இளம் வீரர் குசால் மெண்டிஸின் வீட்டில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பாணந்துறை கொரகான கல்கனுவ பகுதியில் அமைந்துள்ள வீட்டில் தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
கடந்த 2ம் திகதி இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களும், 5000 ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிகாலை வேளையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று மாடிகளைக் கொண்ட வீட்டில் கீழ் மாடியில் இவ்வாறு தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக குசால் மெண்டிஸின் குடும்ப உறுப்பினர் தீப்த மெண்டிஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குசால் மெண்டிஸ் தென் ஆபிரிக்காவில் நடைபெற்று வரும் கிரிக்கட் போட்டித் தொடரில் தற்போது விளையாடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.