அனர்த்த முகாமைத்துவத்தின் அசமந்தப்போக்கு: ஐந்து நாட்களாகியும் கவனிப்பாரற்று ஒரு குடும்பம்

Report Print Reeron Reeron in சமூகம்
76Shares

கிரான் தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முறக்கொட்டான்சேனைப் சேர்மன் வீதியிலுள்ள ஒரு தனியார் குடியிருப்பு ஒன்று எதிர்பாராத விதமாக கடந்த வியாழக்கிழமை(02) தீக்கிரையாகிய சம்பவம் நடந்ததில் இருந்து இதுவரையில் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் எவரும் முன்வந்து எந்தவொரு உதவியும் வழங்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

குறித்த வீட்டிற்கு நேற்று மாலை சென்ற பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் லங்காசிறி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த சம்பவம் இடம்பெற்றவுடன் பிரதேச செயலக மட்டம் மற்றும் அரச அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரையில் எவரும் பார்வையிடவில்லை.

குறித்த தீயினால் ஓலைக் குடிசையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது.

சமைப்பதற்கோ அல்லது தங்குவதற்கோ எந்தவொரு வசதியும் இல்லாமல் இருந்த குடும்பத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் சம்பவத்தை பார்வையிட்டதும், அவ்விடத்தில் வைத்து தொலைபேசியூடாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு சம்பவத்தைத் தெரியப்படுத்தியவேளை,

உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குரிய அவசர தேவைகளை உடனே பூர்த்தி செய்து கொடுக்கின்றோம் என வாக்குறுதி கொடுத்தார்கள்.

ஆனால் சம்பவம் இடம்பெற்று இன்றுடன்(05) நான்கு நாட்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒரு தனிப்பட்ட குடும்பத்திற்கு ஏற்பட்ட அனர்த்தத்திற்கு இவ்வளவு நாட்களாக உதவி செய்ய இழுத்தடிக்கும் மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவக் குழு, எவ்வாறு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான மக்களின் குறைகளை தீர்த்து வைக்கபோகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அரசாங்க அதிபரினால் இடம்பெறும் அனர்த்தம் தொடர்பான ஒவ்வொரு அமர்விலும் அதைச் செய்துள்ளோம், இதைச் செய்துள்ளோம் என தலைசாய்க்கும் இந்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு, அடிப்படையாக இடம்பெற்ற ஒரு சம்பவத்திற்கு உதவ முன்வராவிடின் இவர்களின் செயற்பாடு மக்களுக்கு உரிய முறையில் எவ்வாறு சென்றடையும் என்பது சந்தேகமே.

எனவே அனர்த்த முகாமைத்துவக் குழுவின் இவ்வாறான அசமந்தப்போக்கு தொடர்பாக அதனோடு சம்பந்தப்பட்ட உயர் பீடங்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பேன்.

குறித்த சம்பத்தை அறிந்து என்னுடன் சேர்த்து கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜாசிங்கம், மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரன் ஆகியோர்கள் ஒவ்வொன்றான வந்து பார்வையிட்டு, அவர்களும் தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுங்கள் எனவும் கூறிய நிலையில் இன்று வரையிலும் எதுவும் இடம்பெறவில்லை.

பிரதேச செயலகத்தினால் மாத்திரம் பத்தாயிரம் ரூபா பணம் வழங்கப்பட்டதாகவும், குடும்பத்தினர் தெரிவித்தனர் என கூறினார்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நிலைமையறிந்து முதன் முதலில் லங்காசிறி சேவை ஊடகங்கள் வாயிலாக வழங்கிய செய்தியூடாக மாவட்டத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் இரண்டு தடவை உதவிப் பொருட்களை வழங்கி வைத்தது மட்டுமின்றி எரிந்து சாம்பளாகிய வீட்டை முழுமையாக கட்டித் தருவதற்குரிய நடவடிக்கையை எடுத்திருந்தார்.

அத்துடன் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர், மாகாண சபை உறுப்பினர் ஒரு தொகை பண உதவி செய்திருந்தனர்.

அத்துடன் முறக்கொட்டான்சேனை கஜமுகா விளையாட்டு கழத்தினர் தகரங்கள், முனைப்பு நிறுவனம் பாடசாலை உபகரணங்கள் உட்பட மாற்று உடைக்கான தொகை பணம், உலக தரிசன நிறுவனம் பாடசாலை உபகரணங்கள் என பலர் உதவிகளை உடனடியாக வந்து செய்திருந்தனர்.

இவையணைத்திற்கும் லங்காசிறி செய்தியூடாக வெளிக்காட்டப்பட்ட எங்கள் குடும்பத்தின் ஊடான செய்தியே முக்கிய காரணமாக அமைக்கின்றபடியினால், மீண்டும் லங்காசிறி செய்தி நிறுவனத்திற்கு பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என இராமலிங்கம் யோகராசா தெரிவித்தார்.

Comments