புதுக்குடியிருப்பில் வழிவிட்டு தொடரும் போராட்டம்

Report Print Mohan Mohan in சமூகம்
51Shares

இரண்டாம் இணைப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி இன்று நான்காவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏனைய மக்களின் நன்மை கருதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் இயங்க வழிவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட கலந்துரையாடலின் மூலம் மக்கள் வழிவிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு செயலாளர் பிரதீபன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் குறித்த கலந்துரையாடலை நடத்தியிருந்தனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டகாரர்கள் எதிர் வரும் வெள்ளிக்கிழமை(10) வரையில் மாத்திரமே பிரதேச செயலகம் இயங்க அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி நான்காவது நாளாக இன்று போராட்டத்தினை தொடர்ந்துள்ளனர்.

கேப்பாப்புலவு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் நுழைவாயிலை அடைத்து கடந்த 3 ஆம் திகதி குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் மாவட்டச்செயலகம் இதுவரை ஆக்கப்பூர்வமாக செயற்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரதேச செயலகத்தின் நுழைவாயிலை அடைத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதனால், இன்று காலை பிரதேச செயலகம் சென்ற அரச கடமை உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்குள் செல்லமுடியாமல் உள்ளனர்.

இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் மாவட்ட செயலகத்தின் ஊடாக வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதாகவும், இதன்மூலம் மேலதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் தற்பொழுது இந்த போராட்டத்தினை கைவிடுமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் நேற்று முன்தினம்(04) போராட்டக்காரர்களிடம் கேட்டுக்கொண்ட போதும் இந்த போராட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரதீபன் அலுவலக நடவடிக்கைகளை செய்வதற்கு அனுமதி தருமாறு கேட்டபோதும் போராட்டகாரர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டத்தை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments