சதிகாரர்கள் காலத்தையும், கவனத்தையும் வேறு திசைகளில் திருப்ப முயற்சிக்கின்றனர் : றிஷாட்

Report Print Ashik in சமூகம்
40Shares

இனவாதிகளும் சதிகாரர்களும் காலத்தையும் கவனத்தையும் வேறு திசைகளில் திருப்புவதற்கு எத்தனித்து வருவதால் மக்கள் பணிகளையும், அபிவிருத்திகளையும் பல்வேறு சவால்களுக்கும், தடங்கல்களுக்கும் மத்தியிலே முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புத்தளம் ஹிதாயத் நகர் முஸ்லிம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்

புத்தளம் அகதி முகாமில் வாழ்ந்து வடமாகாணத்தில் மீளக்குடியேறிவரும் மக்களினது பிரச்சினைகளிலும் உள் கட்டுமானப் பணிகளிலும் கரிசனை செலுத்தும் அதேவேளை சமாந்தரமாக புத்தளத்தில் வாழும் பெரும்பாலான அகதி மக்களின் தேவைகளையும் கவனிக்க வேண்டிய கட்டுப்பாட்டில் இருக்கின்றோம்.

மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் புத்தளத்தில் வாழ்ந்துவரும் அகதி மக்களின் கட்டுமானப்பணிகளையும், வாழ்வியல் தேவைகளையும் மேற்கொள்ளும் போது எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுத்தோமோ அதேயளவு சவால்களை வடக்கு மீள்குடியேற்றத்திலும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அத்துடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் இனவாதிகளுடன் கைகோர்த்து அவர்களுக்கு தீனிபோடுகின்ற வேதனையான நிலையும் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்திற்கு இன்று நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளை தட்டிக் கேட்பதற்கோ பார்ப்பதற்கோ நமது சமூகத்தில் எவருமில்லாத ஒரு நிலையை நாம் காண்கின்றோம்.

அதுமட்டுமன்றி சில அரசியல்வாதிகள் மௌனம் காக்கின்றனர். இந்த நிலைகளைக் கடந்து நாங்கள் பணியாற்றும் போது எங்களை இனவாதிகளென சித்தரித்துக் காட்டுகின்றனர்.

காரட்டூன்களிலும் எழுத்துக்களிலும் முஸ்லிம் சமூகத்தை ஒரு மோசமான சமூகமாக சில ஊடகங்கள் திட்டமிட்டு வெளிக்காட்டுகின்றன. முஸ்லிம் பெண்ணொருவர் கோடரி கொண்டு மரத்தை வெட்டுவது போன்று ஒரு காட்சியை வேண்டுமென்றே காரட்டூனாக வரைந்து பத்திரிகைகளில் சித்தரிக்கின்றனர்.

இதுதான் இந்த சமூகத்தின் இன்றய கவலையான நிலையாக இருக்கின்றது. வடக்கிலேயுள்ள கிட்டத்தட்ட 154 கிராமங்களிலும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஒவ்வொரு கிராமங்களிலும் வித்தியாசமான பிரச்சினைகள் உள்ளன. புதிதாக குடியேற்றப்பட்ட சில கிராமங்கள் தொடர்பில் இனவாதிகள் தொடர்ந்த வழக்குகளுக்கும் நாங்கள் முகங் கொடுக்கின்றோம்.

மன்னார் மாவட்டத்தில் பூர்வீகக் கிராமமான காக்கையன் குளத்தின் மாதிரிக் கிராமமாக புத்தளத்தில் அமைந்துள்ள ஹிதாயத் நகருக்கும் கடந்த காலங்களில் நாங்கள் பணியாற்றியது போன்று, இன்னும் பல அபிவிருத்திகளை இந்த வருடத்திற்குள் நிறைவேற்றுவதற்கு எண்ணியிருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

Comments