தொற்று நோயினால் பாதிக்கப்படுவதை விட தொற்றா நோயின் தாக்கம் காரணமாகவே அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுவதுடன் அதிக உயிரிழப்புகளும் ஏற்படுவதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உடல்நல மேம்பாட்டு வாரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற உடல்நல மேம்பாட்டு நிகழ்வு இன்று காலை பிரதேச செயலக முன்னிலையில் நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வினை மண்முனை வடக்கு விளையாட்டு உத்தியோகத்தர் பிரசாத் நடாத்தினார்.
இதன்போது உடல்நல மேம்பாட்டு வாரம் தொடர்பிலான தெளிவுபடுத்தலை பிரதேச செயலாளர் மேற்கொண்டதுடன் உடற்பயிற்சியை விளையாட்டு உத்தியோகத்தர் மேற்கொண்டார்.
பிரத்தியேக உடற்பயிற்சி மற்றும் ஆயிரம் மீற்றர் ஓட்ட நிகழ்வும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ,உதவிதிட்டமிடல் பணிப்பாளர் உட்பட பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.