யாழ். வலி வடக்கு ஊறணி பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பகுதியில் மக்கள் நடமாட்டம் காணப்படுதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு, யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த கரையோரப் பிரதேசமும் அதைனை சூழவுள்ள 2 ஏக்கர் காணியும் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த ஊறணி பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டிருந்தது.
எனினும், 400 மீற்றர் நீளமான கரையோரப் பகுதி மற்றும் இதனை அண்மித்துள்ள 2 ஏக்கர் காணியும் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே இராணுவத்தினர் வைத்திருந்தனர்.
இதன் காரணமாக குறித்த பகுதியில் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக தெரிவித்து அந்த பகுதி மக்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.
அத்துடன், குறித்த பகுதியில் உள்ள மக்கள் மீன்பிடித் தொழிலையே நம்பி இருப்பதன் காரணமாக, கரையோரப் பகுதிகளையும் விடுவிக்க வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு, அண்மையில், குறித்த கரையோரப் பிரதேசமும் அதை சூழவுள்ள 2 ஏக்கர் காணியும் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து, யாழ். ஊறணி பகுதி வழமைக்கு திரும்பியுள்ளதாகவும், தமது பூர்வீக தொழிலை ஆரம்பிக்கும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.