இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவது தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு இழைக்கும் பச்சைத் துரோகம்

Report Print Thamilin Tholan in சமூகம்
78Shares

இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் கால அவகாசம் வழங்குவது என்பது எமது மக்களுக்கு இழைக்கும் பச்சைத் துரோகமான ஒரு விடயம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் கடந்த வாரம் ஜெனீவாவிற்குச் சென்று கால நீடிப்பை வழங்குவதற்கு இணங்கியிருக்கிறார். இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இந்தக் கால நீடிப்பிற்கு இணங்கியிருக்கிறது என்பது தான் யதார்த்தம்.

மிக மோசமான தீர்மானத்திற்கு நீங்கள் ஒரு நிபந்தனையில்லாத ஆதரவை வழங்கித் தற்போதைய அரசாங்கம் சர்வதேச பங்களிப்பை முற்றுமுழுதாக உதாசீனம் செய்யுமளவிற்கு நீங்கள் செயற்பட்டிருக்கிறீர்கள்.

இந்த நிலையில் தாங்கள் சர்வதேச பங்களிப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்ற விடயத்தை அரசாங்கம் பகிரங்கமாகவே கூறியிருக்கும் சூழலில் கூட்டமைப்புத் தொடர்ந்தும் கால அவகாசத்தை நீடிக்கப் போகிறது எனில் அது நிச்சயமாகப் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களின் அடிப்படையில் எடுக்கப்படும் ஒரு முடிவல்ல.

மாறாகத் தங்களுடைய எஜமானர்கள் விரும்பிய வகையில் இந்த அரசாங்கத்தைக் காப்பாற்றும் நோக்கத்துடன் மாத்திரம் எடுக்கப்படும் முடிவு என்பதையும் எமது மக்கள் மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நாவில் இலங்கை தொடர்பாக ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அது மாத்திரமல்லாமல் இலங்கை தொடர்பாக 2012 முதல் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அக்கறை செலுத்திக் கொண்டு வந்த விடயங்கள் தொடர்பாக விசேடமாக 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயவிருக்கின்றது.

இவ்வாறான பிண்ணனியில் இலங்கை அரசாங்கம் தாங்கள் ஒன்றரை அல்லது இரண்டு வருட கால அவகாசம் மேலதிகமாகக் கோரவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எங்கள் மக்களுக்கு இந்தத் தீர்மானம் தொடர்பானதொரு தெளிவு முதற்கட்டமாகத் தேவை. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் நாங்கள் ஆரம்பத்திலிருந்து கூறி வந்த விடயங்கள் தற்போதுள்ள அரசியல் நிலைமைகளைக் கையாள்வதற்கு மாத்திரமே நிறைவேற்றப்பட்டிருக்கிறதே தவிர பொறுப்புக் கூறல் என்ற கோணத்தில் அந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பதை நாங்கள் ஆரம்பித்திலிருந்தே தெரிவித்து வருகிறோம்.

ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்து வந்த காலத்திலிருந்த தீர்மானங்கள் ராஜபக்ஷ ஆட்சிக்கு ஒரு நெருக்கடியைக் கொடுத்து ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் தான் அந்தத் தீர்மானங்கள் ஐ.நாவில் கொண்டு வரப்பட்டதே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டுடன் குறித்த தீர்மானங்கள் கொண்டு வரப்படவில்லை என்பது தான் எங்களின் விமர்சனங்களாகவிருந்தன.

பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தான் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் தான் இந்த நாடுகள் நிறைவேற்றுகின்ற தீர்மானங்கள் ஆட்சி மாற்றத்தை மாத்திரம் மையப்படுத்திய தீர்மானங்களை நாங்கள் நிராகரித்து எவ்வாறான தீர்மானங்கள் எமக்கு நன்மையோ பயக்கும் என்பதை நாங்கள் ஆணித்தரமாகக் கூறியதுடன், வேறு எவற்றையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதையும் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம்.

இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ந்து செயற்பட்டிருந்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் புதிய ஆட்சியைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், கூட்டமைப்பு அவ்வாறு செயற்படவில்லை.

நிபந்தனையில்லாத ஆதரவை வழங்கி ஒவ்வொரு தீர்மானத்தையும் வல்லரசுகள் தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்தியதுடன், வெறுமனே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மாத்திரம் நாங்கள் ஆதரித்தமையால் தான் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இந்த அரசாங்கமே விரும்பியவாறு ஒரு உள்ளக விசாரணை தான் 2015 செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இது ஒரு கலப்புப் பொறிமுறையல்ல. உள்ளகப் பொறிமுறை. இலங்கை அரசிடம் தான் இதற்கான முழுப் பொறுப்புக்களும் உள்ளன. இலங்கை அரசாங்கத்திடம் முழுப் பொறுப்புக்களையும் கொடுத்து விட்டு நீங்கள் விரும்பினால் சர்வதேச நீதிபதிகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இலங்கை அரசாங்கம் சர்வதேசப் பங்களிப்புக்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லையென மிகத்தெளிவாகக் கூறியுள்ளது. வெறுமனே கண்காணிப்பிற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் மாத்திரம் தாங்கள் தயாராகவிருக்கிறோமே தவிர அந்தப் பொறிமுறையை முழுமையாகச் சர்வதேச பங்களிப்புடன் செயற்படுத்தப் போவதில்லை என்பதையும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இவ்வாறானதொரு சூழலில் தான் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை தொடர்பாக ஐ.நாவில் ஆராயப்படவிருக்கின்றது.

வடக்கு கிழக்குத் தமிழ் சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்தவொரு நிலைமையிலும் பாதிக்கப்பட்ட மக்களின் கோணத்தில் கால நீடிப்பை வழங்கக் கூடாது எனவும், இலங்கை அரசாங்கம் தொடர்பான முழுமையான சர்வதேச விசாரணை இடம்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளதுடன், ஏற்கனவே காணப்படும் தீர்மானத்தை வைத்து நாங்கள் எதுவும் செய்ய முடியாது எனவும் கூறியிருக்கிறார்கள். இந்த விடயத்தை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம்.

இந்த நிலையில் வடகிழக்கு சார்ந்த சிவில் அமைப்புக்கள் கால நீடிப்பைத் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கக் கூடாது என்ற முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறான முடிவை எடுப்பதுடன் மாத்திரம் நின்று விடாது முழுமையான சர்வதேச விசாரணை நோக்கிய வகையில் தீர்மானம் அமைய வேண்டும் என வலியுறுத்த வேண்டும் எனவும் நாங்கள் பகிரங்கமாகக் கேட்டுக் கொள்கிறோம்.

எமது மக்கள் எழுக தமிழ் தொடர்பாகத் தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ள நிலையில் சிவில் சமூகங்களும் தமது நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் பகிரங்கமாக முன்வைக்க விரும்புகிறோம்.

இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதற்குக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவானது தாங்கள் விரும்பும் அரசாங்கத்திற்கு எந்தவொரு நெருக்கடிகளையும் வழங்காமல் மீண்டும் நாங்கள் விரும்பாத ஆட்சி மாற்றம் ஏற்படும் போது இந்தத் தீர்மானத்தை வைத்துக் கொண்டு மீண்டும் அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவே அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்களே தவிர பொறுப்புக் கூறல் என்ற விடயம் இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதையும் நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆகவே, பொறுப்புக் கூறல் என்ற விடயத்தில் முழுமையான சர்வதேச விசாரணை தான் தேவை என்பதை வட கிழக்குச் சார்ந்த சிவில் அமைப்புக்கள் இது தொடர்பில் பகிரங்கமாகத் தமது நிலைப்பாடுகளை முன்வைத்துச் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள விரும்புகிறோம் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments