கேப்பாப்புலவு - பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று சற்று முன்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்றைய தினம் முற்பகல் 10.00 மணியளவில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் குறித்த கவனயீர்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை மீட்டெடுப்பதற்காக இன்றும் 23ஆவது நாளாக தமது போராட்டத்தினை தொடர்கின்றனர்.
கொள்கையில் மாற்றமில்லை காணியில் கால் பதிக்கும் வரை போராட்டம் தொடரும் என அம்மக்கள் கூறியுள்ளனர்.
கடந்த 31ஆம் திகதி விமானப் படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பில் மக்கள் அங்கிருந்து வெளியேறாமல் முகாமிட்டு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் இப்போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரின் ஆதரவு தொடர்ந்தும் கிடைக்கப்பெறுவதுடன் தற்போது யாழ்ப்பாணத்திலும் ஆதரவுப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் உண்ணாவிரதத்திலும், இம்மக்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பு மக்களும் தொடர்ந்து 20ஆவது நாளாக போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டகாரர்கள் “கோப்பாபுலவு மக்களின் நிலங்கள் எந்த நிபந்தனைகளும் தமாதமும் இன்றி விடுவிக்கப்படவேண்டும், வலி வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் எப்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் முடிவு என்ன, அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது, இராணுவமே மக்களின் நிலங்களை விட்டு வெளியேறு, நல்லாட்சியின் போலி முகமே பதில் சொல்” ஆகிய கோசங்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.