கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளிடம் எங்களுடன் வந்து இருப்பதனை விடுத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சியில் கடந்த திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் தொடர் போராட்டமும், பரவிப்பாஞ்சான் மக்களின் காணி மீட்புக்கான தொடர் பேராட்டமும் இரவு பகலாக தொடர்கிறது.
குறித்த போராட்டத்தில் இன்று, நான்காவது நாளாகவும் சுழற்சி முறையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி உறவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளிடம்,
மேற்படி இரண்டு போராட்டங்களிலும் ஈடுப்பட்ட மக்கள் தாங்கள் தங்களின் பிரதிநிதிகளால் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும், காணி, காணாமல்ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் விடயங்களில் காலத்திற்கு காலம் வெறும் வாக்குறுதிகளை வழங்கி விட்டு, அவ்வாறே இருந்து விடுகின்றார்களே தவிர அதன் பின்னர் அதற்கான எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுப்பதில்லையும் என தெரிவித்தனர்.
அத்துடன் எங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி எங்களுடன் வந்து ஒரு சில மணித்தியாலங்கள் இருந்துவிட்டுச் செல்வதனை தாம் விரும்பவில்லை.
கடந்த காலங்கள் போன்று அவ்வாறு நடந்துகொள்ளாது ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் அரசியல் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.