வறுமை நிலை அதிகரிப்புக்கு இதுதான் காரணம் : தயாபரன் விளக்கம்

Report Print Navoj in சமூகம்

எதைச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் எடுக்கும் உற்பத்தியாளர்கள் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதில் தவறிழைப்பதனாலேயே பல உற்பத்திச் செயற்பாடுகள் வெற்றியளிப்பதில்லை என வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன் தெரிவித்துள்ளார்.

கடந்த கால யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டோருக்கு தொழில் முயற்சிக்காக கடனுதவி வழங்குவது தொடர்பிலான செயலமர்வு நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தொழில் முயற்சிக்காக வழங்கப்படும் கடன் அல்லது உபகரணங்கள் மாத்திரம் ஒருவரது வாழ்க்கையினை மாற்றியமைத்து விட முடியாது என்பதனை நாம் முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் சுனாமி அனர்த்தத்தின் பின்னர் தொடர்ந்து இன்றுவரை வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள் மூலம் எமது பிரதேசங்கள் வறுமையில் இருந்து எப்போதோ மீண்டிருக்க வேண்டும்.

வறுமை நிலை குறைவடைந்து செல்லாமல் அதிகரிக்கும் தன்மை தொடர்பாக நாம் ஆராய்ந்து பார்த்தால், உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி செயற்பாடுகளில் தவறிழைத்துள்ளமையினைக் காண முடியும்.

ஒவ்வொருவரும் அர்ப்பணிப்பான, இலக்கு நோக்கிய வழியில் பயணிப்பதால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

நுண்கடன் நிறுவனங்கள் வருடாந்த வட்டியாக 24 வீதத்திற்கும் கூடிய தொகையினை அறவிடும் நிலையில் உங்களுக்கு வழங்கப்படவுள்ள கடன்களுக்கு மிகமிகக் குறைந்த வருடாந்த நான்கு வீத வட்டி மட்டுமே அறவிடப்படும்.

இந்த சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

நிகழ்வில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கலந்து கொண்டதுடன், வெருகல் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநிதன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், புனர்வாழ்வு அமைச்சின் கீழ்ப் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Comments