எமக்கு சொந்தமான காணிகளில் எங்களை வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனக்கோரி வவுனியா பாரதிபுரம், விக்ஸ் காட்டுப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்மொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா, பாரதிபுரம், விக்ஸ் காட்டுப்பகுதியில் கடந்த 5 தொடக்கம் 6 வருடங்களாக சுமார் 44 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் தொடர்ந்தும் வன இலாகாவினரால் தொந்தரவிற்கு உள்ளாகின்றோம்.
நாங்கள் வாழும் காணியை எங்களுக்கு வழங்குவதற்கான வாக்குறுதிகள் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளால் வழங்கப்பட்டது.
இருந்த போதும் இதுவரை இக்காணிகளை வழங்குவது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
எங்களுக்கு குறித்த பகுதியில் முறையாக வீட்டுத் திட்டம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், நாங்கள் மின்சார வசதியோ, வீதி வசதியோ, வீட்டு வசதியோ இன்றி வாழ்கிறோம்.
இதனால் எங்களது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே எங்களுடைய காணியை எங்களுக்கே வழங்குவதோடு, முறையான வீட்டுத் திட்டத்தினையும் தர வேண்டும்.
இல்லாவிடில் எங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வட மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துரையாடியிருந்தனர்.