தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாம் குடியிருக்கும் காணிகளின் விபரங்களை கோரி 180 குடும்பங்கள் வவுனியா பிரதேச செயலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
இம் மாதம் 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக நிரந்தரமாக குடியிருக்கும் காணிகளின் உரிமையாளர்கள் விபரங்களை மக்கள் கோரியுள்ளனர்.
நீண்டகாலமாக இக்காணிகளில் மக்கள் குடியிருக்கின்ற போதும் அவர்களது காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
இதனால் அப்பகுதி காணிகள் யாருடைய பெயரில் உள்ளன?, நீண்டகாலமாக அதில் வசிக்கும் தமக்கு அக்காணிகள் வழங்கப்படாமைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைப் பெற்று 180 குடும்பங்கள் வவுனியா பிரதேச செயலகத்தில் விபரங்களைக் கோரியுள்ளனர்.
அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவின் நெளுக்குளம், ஊர்மிளாக்கோட்டம், காத்தான்கோட்டம், ஈசன்கோட்டம், அம்பிகைபாலன் கோட்டம், தாஸ்கோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு விண்ணப்பங்களைக் கையளித்துள்ளனர்.
அதனைப் பெற்றுக் கொண்ட வவுனியா பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் அ.ஜெயரட்ணம், 14 நாட்களுக்குள் இது தொடர்பில் அறியத்தருவதாக தெரிவித்துள்ளதுடன் மக்களது விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டமைக்கான பதில் கடிதத்தை வழங்கியுள்ளார்.