கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் உலக தாய் மொழி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
“பன்மொழி கல்வி மூலம் நிலையான எதிர்காலத்தினை நோக்கி” என்னும் தலைப்பில் நேற்று உலக தாய்மொழி தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது கிழக்கு மாகாணத்திலுள்ள பல மொழிகளைப் பேசும் கலைஞர்கள் கலந்துகொண்டு தங்களது கலாசார மரவுரிமைகள் தாங்கிய செயற்பாடுகளை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அரிய இனமாக காணப்படும் வேடுவர்கள், பறங்கியர்கள், தெலுங்கர்கள் கலந்துகொண்டு தமது உணர்வுகளை பகிர்ந்துகொண்டதுடன் தமிழ் முஸ்லிம் கலைஞர்களும் கலந்துகொண்டனர்.
சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர் பா.கிருஸ்ணவேணியின் இணைப்புடன் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில் விசேடமாக கண்காட்சியொன்றும் நடாத்தப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் ஆதிக்குடிகளின் வாழ்க்கை முறைகள் பண்டைய கலைகளின் இருப்பு மற்றும் பன்மொழிகளின் பண்பாடுகளைக் கொண்டதாக இந்த கண்காட்சி அமைந்திருந்தது.
கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் சி.ஜெயசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கொழும்பு சட்ட பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் நா.செல்வகுமாரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் சி.ஜெயசங்கர், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர் பா.கிருஸ்ணவேணி ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.