கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாகக் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

Report Print Thamilin Tholan in சமூகம்
58Shares

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் 20 நாட்களைக் கடந்தும் தீர்வின்றித் தொடரும் நிலையில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அம்மக்களுக்கு ஆதரவாக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையம் முன்பாக முற்பகல்- 11.30 மணி முதல் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், விக்கிரபாகு கருணாரட்ண, சிறிதுங்க ஜெயசூரிய, குமரகுருபரன், அசாத்சாலி, செந்திவேல் ஆகிய அரசியல் பிரமுகர்களுடன் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தென்னிலங்கை மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் 'கேப்பாப்புலவு மக்களின் நிலங்களை உடன் வழங்கு, 'நல்லாட்சியினர் தமிழ்மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி எங்கே?' உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களையும் கைகளில் தாங்கியிருந்ததுடன்,

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவான பல கோஷங்களையும் எழுப்பினர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கருத்துத் தெரிவிக்கையில்,

2012 ஆம் ஆண்டு கேப்பாப்புலவு மக்கள் மெனிக்பாம் முகாமிலிருந்த போது கேப்பாப்புலவிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரியிருந்தனர்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் மக்களை அழைத்து காணி விடுவிப்பதற்காகப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கூறி ஏமாற்றியுள்ளனர்.

போர் முடிவடைந்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள நிலையிலும் இராணுவ முகாம்கள் எனும் போர்வையில் மக்களின் காணிகளை அபகரித்து வைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மக்களுக்குச் சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விட்டு இராணுவம் வெளியேற வேண்டும். தமது காணிகளில் மக்கள் சுதந்திரமாக நடமாட நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறிக் கொள்பவர்கள் ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும்.

நல்லாட்சி அரசு எனக் கூறிக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஒருமுகத்தையும், தமது நாட்டு மக்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டி ஏமாற்றும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மேற்கொண்டுவரும் நியாயமான போராட்டத்துக்கு நல்லாட்சி அரசு விரைவில் தீர்வு வழங்கவேண்டும். நேர்மையாக மக்களை வழிநடத்தவேண்டும்.

வடபகுதி மக்களின் காணிமீட்புப் போராட்டம் வெற்றிபெற தென்னிலங்கைசக்திகளையும் ஒன்றிணைத்து போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம் என்றார்.

Comments