பசித்த வயிருடன் போராடும் மக்கள் : பாராளுமன்றினூடாக முடிவு கிடைக்குமா?

Report Print Mohan Mohan in சமூகம்
26Shares

வடமாகாணத்தில் பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் தொடர்கின்றன.

பொதுமக்களுக்கு ஆதரவாக பல அமைப்புக்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

இவற்றை எல்லாம் ஒரு கணக்கிலும் எடுக்காமல் நகர்கின்றது தென்னிலங்கை அரசியல் களம்.

தூற்றுவோர் தூற்றட்டும், போற்றுவோர் போற்றட்டும் எனது ஆட்சியில் மாற்றம் ஏற்பட இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கின்றது.

அதற்குள் எல்லோருடைய மனங்களையும் வெல்வேன் என்ற கருத்தின் கீழ் நல்லாட்சியின் அரசன் மைத்திரிபால சிறிசேன மெல்ல மெல்ல தனது பணிகளை முன்னெடுப்பதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையில் அப்பாவி பொதுமக்கள் தமது அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதில் வேறு வழியின்றி உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் தம்மால் முடியாததை அந்த மக்களின் போராட்டங்களூடாக செயற்படுத்த முனைகின்றனர்.

இதற்காக அவர்கள் அந்த போராட்டங்களை மேலும் ஊக்கப்படுத்துகின்றனர். இதனால் பாரிய பாதிப்புக்குள்ளாவது அப்பாவி பொதுமக்களே தவிர வேறுயாருமில்லை.

இந்த நிலையில் கேப்பாப்புலவு மக்களின் காணிமீட்பு போராட்டம் 23 ஆவது நாளாக தொடர்கின்றது.

இதேவேளை புதுக்குடியிருப்பில் பொதுமக்களின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமும் தொடர்கின்றது.

மேலும், புதுக்குடியிருப்பில் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொள்ளும் பொதுமக்களுடன் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்கின்றார்.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்காக பாராளுமன்றில் எடுத்துரைத்த பேச்சுக்களின் ஆவணங்களுடன் சிவமோகன் எம்.பி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்கின்றார்.

அப்படியென்றால் தமிழ்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தின் ஊடாக முடிவுகள் கிடைப்பது என்பது கேள்விக்குறியாகி உள்ளதாக கருதப்படுகின்றது.

அது மட்டுமல்ல அந்த ஆவணங்களின் கீழே ஒரு தமிழ்த்தாய் பசித்த வயிற்றுடன் உறங்குகின்றார்.

இந்த நிலையை உற்று நோக்கும் போது தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இன்றைய சூழலில் எவ்வழியில் எவறால் தீர்க்கப்படும் என்பதே இன்றை இளைய சமூகத்தினரிடம் எழும் கேள்வியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments