நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் தற்போது செயற்படுத்தப்படுகின்ற திட்டங்களுக்கமைய எதிர்வரும் 6 மாதங்களுக்குள் 5 லட்சம் தொழில் வாய்ப்புகள் ஏற்படவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்காக இளைஞர்கள் ஆயத்தமாக வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போதைய இளைஞர்கள் அரசாங்க தொழில் செய்வதற்கு அதிக அக்கறை செலுத்துவதனால் தொழில் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றியவர்,
“எங்கள் இளைஞர்கள் அரசாங்க தொழிலை பெற்றுக் கொள்வதற்கே அதிக அக்கறை செலுத்துகின்றார்கள். எனினும் அரசாங்கத்தை விட தனியார் துறையில் 3 மடங்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
அதேபோன்று தான் வேலையும் 3 மடங்கு செய்ய வேண்டும். இன்று செயற்படுத்தபடும் திட்டத்தின் ஊடாக எதிர்வரும் 4 மாதங்களில் 5 லட்ச தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
இன்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகைத்தந்து ஆயிரம் தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக கூறுகின்றார்கள். எனினும் அதற்கு தகுதியான 100 பேர் மாத்திரமே உள்ளனர்.
இந்த நிலைமை மாற வேண்டும். இளைஞர்கள் தங்கள் கைகளில் உள்ள கையடக்க தொலைப்பேசிகளை கொண்டு தேவையற்ற மற்றவர்களின் விடயங்களை தேடிக் கொண்டுள்ளன். அவற்றினை மேற்கொள்வதற்கு பதிலாக நாட்டிற்காக வேலை செய்ய வேண்டும்.
கடந்த இரண்டு தசாப்த்தங்களுக்கு முன்னர் இந்தியாவில் காணப்பட்ட நிலைமையை பிரதமர் நரசிங்க ராவ் மாற்றியமைத்தார்.
இன்று இந்தியா, அமெரிக்க, ஐரோப்பாவுக்கு அதிக வருமானம் தொழில்நுட்பம் ஊடாகவே பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. இந்த நிலையை தான் நாங்கள் ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.