அங்கவீனமுற்ற படையினருக்கான ஓய்வூதியத்தை உரிய முறையில் வழங்க விக்கிரமபாகு கோரிக்கை

Report Print Aasim in சமூகம்
18Shares

அங்கவீனமுற்ற படையினருக்கான ஓய்வூதியத்தை உரிய முறையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விக்கிரமபாகு கருணாரத்தின கோரிக்கை விடுத்துள்ளார்.

அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு முழுமையான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி படைவீரர்களைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகம் இன்றுடன் ஒன்பதுநாட்களைப் பூர்த்தி செய்துள்ளது.

இதனை ஆதரிக்கும் வகையில் இன்று மாலை கோட்டை ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டமொன்றும் நடைபெற்றிருந்தது.

இதன்போது கருத்துத் தெரிவித்த நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தின,

அங்கவீனமுற்ற படையினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்து வருகின்றது. ஆனால் தங்களுக்கான ஓய்வூதியம் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என்று அங்கவீனமுற்றுள்ள படையினர் தெரிவிக்கின்றனர்.

எனவே, இதில் உள்ள குறைபாடுகளை களைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விக்கிரமபாகு கருணாரத்தின கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே இன்று நண்பகல் அங்கவீனமுற்ற படையினரின் சத்தியாக்கிரகம் நடைபெறும் இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வருகை தந்து தனது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments